சுல்தான் குடாரத் மாகாணத்தில்
பிலிப்பைன்சில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை. பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள சுல்தான் குடாரத் மாகாணத்தில் இன்று காலை 10.13 மணியளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது 7.0 ரிக்டர் அளவில் பதிவானதாக பிலிப்பைன்ஸ் நிலநடுக்கவியல் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் கடலோர நகரமான பாலேம்பாங்கிலிருந்து தென்மேற்கே 133 கிலோமீட்டர் தொலைவில், 722 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
நாட்டின் இரண்டாவது பெரிய தீவான மிண்டானாவோ, டவாவோ ஆக்சிடென்டல், தாவோ ஓரியண்டல், சாராங்கனி, தாவோ டி ஓரோ, டாவோ டெல் நோர்டே, கோடாபாடோ உள்ளிட்ட மாகாணங்களிலும் இந்த நில நடுக்கம் உணரப்பட்டது. இருந்தாலும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. பாதிப்புகள் குறித்த தகவல்களும் வெளியாகவில்லை. தீவு நாடான பிலிப்பைன்ஸ், பசிபிக் கடல் பகுதியின் ‘ரிங் ஆஃப் ஃபயர்’ வட்டத்தில் அமைந்துள்ளதால் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.