எழும்பூர் கோர்ட்டில் போலீஸார் மனு

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 11 பேரையும் ஏழு நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க எழும்பூர் கோர்ட்டில் போலீஸார் மனு அளித்துள்ளனர். பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5ம் தேதி பெரம்பூரில் அவரது வீடு அருகே கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக பிரபல கூலிப்படை கும்பல் தலைவன் (மறைந்த) ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு உள்ளிட்ட 11 பேர் கைது செய்யப்பட்டு பூந்தமல்லி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க செம்பியம் போலீஸார் எழும்பூர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளனர். பாதுகாப்புக் காரணங்களுக்காக வீடியோ கான்ஃப்ரன்சிங்கில் ஆஜர்படுத்த அனுமதிக்குமாறு போலீஸார் முறையிட்டுள்ளனர்.

நீதித்துறை நடுவரும் இதற்கு அனுமதி அளித்துள்ளதாக தெரியவந்துள்ளது. 11 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்கும்போது கொலையாளிகளுக்கு நிதி உதவி செய்தது, சட்ட உதவி அளித்தது, கொலையின் பின்னணியில் இருப்பது யார் உள்ளிட்ட விவரங்கள் தெரியும் என போலீஸார் தெரிவித்தனர். இந்தக் கொலையில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் பொன்னை பாலுவுக்கு கொலைக்கான திட்டத்தை வகுத்துக் கொடுத்தது யார் என்பது தொடர்பாகவும் ஒருபுறம் தீவிர விசாரணை நடைபெறுகிறது. ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவத்தை நேரில் பார்த்த அவரது உறவினர்களை அழைத்து கொலையாளிகள் அனைவரையும் சிறையில் வரிசையாக நிற்க வைத்து அடையாள அணிவகுப்பு நடத்தவும் போலீஸார் முடிவு செய்துள்ளனர்

Leave a Reply

Your email address will not be published.