உத்தரப்பிரதேச மாநிலத்தில் மின்னல் தாக்கியதில்
உத்தரப்பிரதேச மாநிலத்தில் மின்னல் தாக்கியதில் ஒரே நாளில் 38 பேர் உயிரிழந்தனர். உத்தரபிரதேச மாநிலம் பிரதாப்கர் மாவட்டத்தில் நேற்று இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. கனமழை காரணமாக 12 மாவட்டங்களில் உள்ள 633 கிராமங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் அம்மாநிலத்தில் 30 மிமீ மழைப் பதிவாகி உள்ளது. இதனிடையே மின்னல் தாக்கியதில் 30 பேர் உயிரிழந்ததாகவும், பலர் காயம் அடைந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர். மேலும் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்காக 712 வெள்ள நிவாரண முகாம்களும் , அவர்களின் கால்நடைகளுக்காக 226 விலங்குகள் காப்பகங்களும் அமைக்கப்பட்டுள்ளது.
உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் லக்கிம்பூர் கேரி மற்றும் பிலிபித் மாவட்டங்களில் வெள்ளம் பாதித்த சில பகுதிகளை பார்வையிட்டார். இந்த பகுதிகளில் வழங்கப்படும் நிவாரணப் பொருட்களை அவர் பார்வையிட்டார்.இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘பிரதாப்கர் மாவட்டத்திற்கு உட்பட்ட சங்க்ராம்கர், ஜெத்வாரா, அண்டூ, மாணிக்பூர், கந்தாய் உள்ளிட்ட கிராமங்களில் மின்னல் தாக்கி 30 பேர் பலியாகி உள்ளனர். வயலில் வேலை செய்து கொண்டிருந்தபோதும், வீட்டில் இருந்த போதும் மின்னல் தாக்கி உயிரிழந்தனர். ஆடு, மாடு போன்ற கால்நடைகளும் மின்னல் தாக்கி பலியாகின. இறந்தவர்களின் குடும்பங்களுக்கு கிரிஷக் துர்காதன சஹாயதா திட்டத்தின் கீழ் இழப்பீடு வழங்கப்படும்’ என்று அதிகாரிகள் உறுதியளித்தனர். இதனிடையே பருவமழை தீவிரம் அடைந்து வரும் நிலையில், வெள்ளம், மின்னல், நிலச்சரிவு காரணமாக அசாம் மாநிலத்தில் இதுவரை 84 பேர் உயிரிழந்துள்ளனர். ஹிமாச்சல பிரதேசத்தில் 22 பேர் பலியாகி உள்ளனர்.