மேயர் மகாலெட்சுமி யுவராஜுக்கு திமுக-வை சேர்ந்த
நெல்லை, கோவை மேயர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்த நிலையில், அடுத்ததாக காஞ்சிபுரம் மேயருக்கு சொந்த கட்சி கவுன்சிலர்களால் சிக்கல் உருவாகி உள்ளது. காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலெட்சுமி யுவராஜுக்கு திமுக-வை சேர்ந்த கவுன்சிலர்களே எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஒவ்வொரு கூட்டத்திலும் மேயர் மற்றும் மாநகராட்சி ஆணையருக்கு எதிராக குற்றச்சாட்டுகளை அடுக்கிய அவர்கள் மேயருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர உத்தரவிட கோரி கடந்த மாதம் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
இதே கோரிக்கையை வலியுறுத்தி தற்போது மாநகராட்சி ஆணையரிடமும் திமுக கவுன்சிலர்கள் மனு அளித்தனர். இதன் தொடர்ச்சியாக வரும் 29ம் தேதி அன்று மாநகராட்சி கூட்டம் நடைபெறும் நிலையில் அப்போது மேயர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது விவாதம் மற்றும் வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. இதில் மேயர் மகாலெட்சுமி பெரும்பான்மையை நிரூபித்தால் பதவியில் தொடரமுடியும் என்ற நெருக்கடி எழுந்துள்ளது