நிதியை எதிர்பார்க்கும் சந்திரபாபு நாயுடு
மத்திய மந்திரி பதவியை விட ஆந்திராவுக்கு அதிக நிதியை எதிர்பார்க்கும் சந்திரபாபு நாயுடு
திருப்பதி:தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ஜ.வுக்கு அடுத்தபடியாக அதிக எம்.பி.க்களை கொண்ட கட்சியாக 2-வது இடத்தில் தெலுங்கு தேசம் உள்ளது. பா.ஜ.க ஆட்சியின் கிங் மேக்கராக சந்திரபாபு நாயுடு உருவாகி உள்ளார்.சந்திரபாபு நாயுடு தனது கட்சிக்கு சபாநாயகர் மற்றும் 5 அல்லது 4 மந்திரி வரை வேண்டுமென கேட்டதாக கூறப்படுகிறது.ஆனால் பா.ஜ.க சார்பில் 2 மந்திரிகள் தர ஒப்புதல் அளிக்கப்பட்டது. இது ஒரு புறம் இருக்க மத்திய மந்திரி பதவிகளை பெறுவதை காட்டிலும் ஆந்திராவின் பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்காக சந்திரபாபு நாயுடு அதிக அளவு நிதியை எதிர்பார்ப்பதாக அவரது கட்சியினர் தெரிவித்துள்ளனர். மத்திய அரசில் 2 மந்திரிபதவிகளை பெறுவதால் மாநிலத்தின் வளர்ச்சி திட்டங்களை மேம்படுத்த முடியாது.எனவே தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்காகவும், போலவரம் அமராவதி போன்ற சிறப்பு திட்டங்களை அமல்படுத்தவும் அதிக நிதியை எதிர்பார்த்து சந்திரபாபு நாயுடு மத்திய அரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். கடந்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி ஆட்சியில் மத்திய அரசிடம் இருந்து முறையான நிதியை பெற்று திட்டங்களை செயல்படுத்தப்படவில்லை.எனவே மத்திய அரசின் கீழ் பல்வேறு சட்டங்கள் வருவதால் அவற்றை நடைமுறைப்படுத்துவதற்காக மத்திய அரசுடன் சந்திரபாபு நாயுடு இணக்கமாக இருந்து நிதியை பெறுவதற்காக முயற்சி செய்து வருவதாக தெலுங்கு தேசம் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.