அரசுத் தேர்வுகள் இயக்குநரகம் அறிவிப்பு

பள்ளி மாணவர் பெயர்ப் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள இறுதி வாய்ப்பு:

சென்னை: 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய பள்ளி மாணவர்களின் பெயர்ப் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள அரசு தேர்வுத்துறை இயக்குநரகம் இறுதி வாய்ப்பை அளித்துள்ளது. இதுகுறித்து தேர்வுத்துறை இயக்குநர் சேதுராம வர்மா, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது: 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய பள்ளி மாணவர்களின் பெயர்ப் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள பலமுறை வாய்ப்பு அளிக்கப்பட்டது. எனினும், பெயர்ப் பட்டியலில் திருத்தங்கள் வேண்டி சில பள்ளிகளிடம் இருந்து கடிதங்கள் இயக்குநரகத்துக்கு வருகின்றன.

இதையடுத்து 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழில் தேர்வர்கள் பெயர், பிறந்த தேதி, புகைப்படம், பெற்றோர் பெயர், பயிற்று மொழி உட்பட விவரங்களில் திருத்தங்கள் மேற்கொள்ள தற்போது இறுதியாக ஒரு வாய்ப்பு பள்ளிகளுக்கு வழங்கப்படுகிறது. அதன்படி தேவையுள்ள மாணவர்களின் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் நகலில் உரிய திருத்தங்களை மேற்கொண்டு சான்றொப்பமிட்டு தலைமை ஆசிரியர்கள் அதை மாவட்ட தேர்வுத்துறை அலுவலகத்தில் ஜுன் 12-ம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும். இதற்கிடையே ஆண்டுதோறும் பெயர்ப்பட்டியலில் திருத்தங்கள் செய்ய போதிய கால அவகாசம் தந்தும், சான்றிதழ் வழங்கப்பட்ட பின்னர் மனுக்கள் பெறப்படுவது வாடிக்கையாக உள்ளது.

இது மாணவர்களுக்கு சிக்கல்களை உருவாக்குகிறது. மேலும், மதிப்பெண் சான்றிதழ் அச்சிட்டு வழங்கிய பின்னர் திருத்தங்கள் கோரி இயக்குநரகத்துக்கு மனுக்கள் அனுப்பக் கூடாது. எனவே, இதுசார்ந்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.