கூட்டணி துணையுடன் மட்டுமே பாஜக ஆட்சி அமைக்க வாய்ப்பு!
மோடிக்கு மக்கள் தீர்ப்பு: கூட்டணி துணையுடன் மட்டுமே பாஜக ஆட்சி அமைக்க வாய்ப்பு!
புதுடெல்லி: 400+ இலக்கு என்ற அறைகூவலுடன் தேர்தலை எதிர்கொண்ட பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி 290+ இடங்களை வசப்படுத்துகிறது. பாஜக தனிப்பெரும்பான்மை பெறாததால் தனது கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடனேயே ஆட்சி அமைக்கும் நிலையே மோடிக்கு மக்கள் அளித்த தீர்ப்பு என்ற வாதம் முன்வைக்கப்படுகிறது.
இந்திய ஜனநாயகத் திருவிழாவின் முடிவு பற்றிய ‘இந்து தமிழ் திசை’யின் தொகுப்பு வருமாறு: நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடந்த மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை காலை 7 மணிக்கு தொடங்கியது. மொத்தமுள்ள 543 தொகுதிகளில் ஏற்கெனவே சூரத் தொகுதியில் பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் வெற்றி பெற்ற நிலையில் எஞ்சிய 542 தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
இரவு 7 மணி நிலவரப்படி பாஜக தனித்து 239 வசப்படுத்துகிறது. கூட்டணிக் கட்சிகளுடன் சேர்த்து பாஜக கூட்டணி 290+ இடங்களில் வெற்றி முகம் கண்டுள்ளது. ஆட்சியமைக்க 272 இடங்களில் வெற்றி பெற்றால் போதும் என்ற நிலையில் பாஜக கூட்டணி பெரும்பான்மை பலத்தைப் பெற்றுள்ளது.
இது ஒருபுறம் இருக்க இண்டியா கூட்டணியில் காங்கிரஸ் 90+ இடங்களை தனித்து வசப்படுத்துகிறது. கூட்டணிக் கட்சிகளுடன் சேர்த்து 235 தொகுதிகளை எட்டுகிறது.
இந்தச் சூழலில் ஆட்சி அமைப்பது பற்றி புதன்கிழமை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி முக்கிய ஆலோசனை நடத்துகிறது. இதில் தெலுங்கு தேசம் கட்சி, ஐக்கிய ஜனதா தளம் கட்சி கலந்து கொள்கிறது. மக்களவைத் தேர்தலில் இந்தக் கட்சியின் என்டிஏவில் அங்கம் வகித்தன. இந்த இரு கட்சிகளின் தலைவர்களான சந்திரபாபு நாயுடுவும், நிதிஷ் குமாரும் இப்போது கிங் மேக்கர்களாக கவனம் ஈர்த்துள்ளனர்.
இண்டியா என்ன செய்யப் போகிறது? – 235 தொகுதிகளை வசப்படுத்தி வலம் வரும் இண்டியா கூட்டணி இந்த இரு கட்சிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக ஊகங்கள் வெளியான நிலையில், டெல்லியில் செவ்வாய்க்கிழமை மாலை காங்கிரஸ் தேசியத் தலைவர் கார்கே, முக்கியத் தலைவர் ராகுல் காந்தி, சோனியா, பிரியங்கா காந்தி ஆகியோர் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டனர். அப்போது பேசிய ராகுல் காந்தி, “இண்டியா கூட்டணிக் கட்சிகள் நாளை கூடும். அப்போது, நாங்கள் எதிர்க்கட்சி வரிசையில் அமர விரும்புகிறோமா? அல்லது வேறு முயற்சியை விரும்புகிறோமா என்பதை கூட்டணிக் கட்சியினருடன் பேசி, அவர்களின் கருத்துகளுக்கு மதிப்பு அளித்து முடிவு செய்வோம்” என்று கூறினார்.
முன்னதாக பேசிய கார்கே, “இந்த முடிவுகள் மோடிக்கு எதிரானது என்பது தெளிவாக தெரிகிறது. இது மோடியின் அரசியல் தோல்வி. இந்த தேர்தலில் பாஜக ஒற்றை முகத்தை காண்பித்து வெற்றிபெற நினைத்தது. அது மோடியின் முகம்.” என்று கூறினார்.
உ.பி-யில் பாஜக-வின் சறுக்கலுக்கு காரணம் என்ன? – மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு பெரும் இடி என்றால் அது உபி முடிவு என்றால் அது மிகையாகாது. 80 தொகுதிகள் கொண்ட உ.பி.யில் சமாஜ்வாதி 38, காங்கிரஸ் 6, பாஜக 32, இதர கட்சிகள் 2 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. எதிர்க்கட்சியின் கூட்டணி வியூகம், மதம் சார்ந்த அரசியல் முன்னெடுப்பு போன்றவை காரணமாக சொல்லப்படுகிறது. குறிப்பாக சமாஜ்வாதி கட்சியின் அகிலேஷ் யாதவ், இஸ்லாமியரகள், யாதவர்கள், ஓபிசி, தலித் மற்றும் சிறுபான்மையின மக்களை கருத்தில் கொண்டு தேர்தல் வியூகங்களை வகுத்தது பாஜக-வின் சறுக்கலுக்கு காரணம் என சொல்லப்படுகிறது.
கேரளாவில் கால் பதித்த பாஜக: இதுவரை கேரளாவில் மக்களவை தேர்தலில் பாஜக வென்றதில்லை. சுரேஷ் கோபியின் வெற்றியின் மூலம் வரலாற்றில் முதல்முறையாக மக்களவை தேர்தலில் பாஜக முதல்முறையாக கேரளாவில் வெற்றிக்கணக்கை தொடங்கியுள்ளது.
கடந்த 2019-ம் ஆண்டு இந்தத் தொகுதியில் பாஜக சார்பில் நடிகர் சுரேஷ் கோபி போட்டியிட்டு 28.2 சதவீத வாக்குகள் பெற்றார். இது கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலில் பாஜக வேட்பாளர் கே.பி.ஸ்ரீசான் வாங்கிய 11.15 சதவீத வாக்குளை விட இரண்டு மடங்கு அதிகம். ஆளும் இடதுசாரி மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்களை பின்னுக்கு தள்ளி இந்த முறை திருச்சூர் தொகுதியை கைப்பற்ற பாஜக தலைவர்கள் பல வியூங்கள் வகுத்தனர். அதன்படி, மீண்டும் சுரேஷ் கோபியை வேட்பாளராக களமிறக்கினர். அதற்கு பலன் கிடைத்துள்ளது.
தமிழகத்தில் தடம் பதிக்காத பாஜக: 2024 மக்களவைத் தேர்தல் களம்: தமிழகத்தில் 39 மக்களவைத் தொகுதிகள், புதுச்சேரியில் ஒரு தொகுதி என 40 தொகுதிகள் கொண்ட இந்த மக்களவைத் தேர்தலில், திமுக தலைமையில் ஓர் அணி, அதிமுக தலைமையில் ஓர் அணி, பாஜக தலைமையில் ஓர் அணி, நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டி என 4 முனைப் போட்டி உருவானது.
திமுக தலைமையிலான அணியில் திமுக 22 தொகுதிகளிலும், காங்கிரஸ் தமிழகத்தில் 9 தொகுதிகளிலும், புதுச்சேரியில் ஒரு தொகுதியிலும் போட்டியிட்டன. சிபிஐ, சிபிஎம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகியவை தலா 2 தொகுதிகளிலும் போட்டியிட்டன. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஒரு தொகுதியிலும், மதிமுக ஒரு தொகுதியிலும் போட்டியிட்டன. மக்கள் நீதி மய்யம் கட்சியானது திமுகவுக்கு ஆதரவு அளித்தது. போட்டியிட்ட அனைத்து தொகுதிகளையும் திமுக வசப்படுத்துகிறது.
ஆரம்பத்தில் தருமபுரியில் பாமக வேட்பாளர் சவுமியா அன்புமணி முன்னிலை வகித்த நிலையில், மதியத்துக்கு மேல் போக்கு மாறியது. அதுவும் கைநழுவிப் போனதால் தமிழகத்தில் பாஜக தடம் பதிக்கவில்லை. ஆனால் கர்நாடகா, தெலங்கானா, ஆந்திரா என பாஜக தனது வெற்றியை கணிசமாகப் பதிவு செய்துள்ளது.
தமிழகத்தில் வெற்றியைப் பதிவு செய்யாவிட்டாலும் கூட வாக்கு சதவீதத்தில் முன்னேறியிருப்பது பாஜகவும் ஆறுதல். இவை தவிர மணிப்பூரில் காங்கிரஸ் வெற்றி, மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணிக்கு ஷாக், ஒடிசாவில் நவீன் பட்நாயக் கட்சிக்கு பின்னடைவு என பல்வேறு சுவாரஸ்யங்களை உள்ளடக்கியதாக அமைந்துள்ளது 2024 தேர்தல் முடிவுகள்.
இந்நிலையில், தேசிய ஜனநாயக் கூட்டணி, இண்டியா கூட்டணி தனித்தனியாக புதன்கிழமை ஆலோசனை நடத்துகின்றன. இதன் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.