அதிமுகவுக்கு பெரும் பின்னடைவு
நெல்லை தொகுதியில் நாம் தமிழர் கட்சி செல்வாக்கு கணிசமாக உயர்வு: அதிமுகவுக்கு பெரும் பின்னடைவு
திருநெல்வேலி: திருநெல்வேலி மக்களவை தொகுதியில் கடந்த தேர்தல்களுடன் ஒப்பிடுகையில் நாம் தமிழர் கட்சியின் செல்வாக்கு கணிசமாக உயர்ந்துள்ளது. அதேநேரம், அதிமுகவுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
இத் தொகுதியில் காங்கிரஸ், பாஜக, அதிமுக, நாம் தமிழர் கட்சியிடையே நான்குமுனை போட்டி நிலவியது. நாம் தமிழர் கட்சி வேட்பாளராக சத்யா போட்டியிட்டார். அவரை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வள்ளியூர், மேலப்பாளையம் பகுதிகளில் பிரச்சாரம் செய்திருந்தார். மற்றபடி வேறு பெரிய தலைவர்களோ, நட்சத்திரங்களோ சத்யாவுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொள்ளவில்லை. அதேநேரத்தில் தொகுதியிலுள்ள பல்வேறு பகுதிகளுக்கும் கட்சியில் தீவிர பற்றுள்ள இளைஞர்களுடன் சென்று சத்யா வாக்கு சேகரித்திருந்தார். அதன் பலனாக அவருக்கு கடந்த தேர்தல்களில் கிடைத்த வாக்குகளைவிட அதிகமான வாக்குகள் கிடைத்துள்ளது.
வாக்கு எண்ணிக்கையின் முதல் சுற்றிலிருந்து அதிமுக வேட்பாளரை பின்னுக்கு தள்ளி 3-வது இடத்தை தக்க வைத்துக்கொண்டிருந்த அவர் 16-வது சுற்றுவரை அதிமுக வேட்பாளரைவிட அதிக வாக்குகளை பெற்றிருந்தார். 17-வது சுற்றிலிருந்து குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் 4-வது இடத்துக்கு தள்ளப்பட்டிருந்தார். 22-வது சுற்றின் இறுதியில் சத்யா 85,722 வாக்குகளை பெற்றிருந்தார்.
கடந்த மக்களவை தேர்தலிலும் திருநெல்வேலி தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக சத்யா போட்டியிட்டிருந்தார். அப்போது அவருக்கு 49,935 வாக்குகள் மட்டுமே கிடைத்திருந்தது. அது இந்த தேர்தலில் இருமடங்காக உயர்ந்திருப்பது சத்யாவுக்கும் மட்டுமின்றி நாம் தமிழர் கட்சியினருக்கு உற்சாகத்தை அளித்திருக்கிறது. மேலும் கடந்த சட்டப் பேரவை தேர்தலிலும் திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட்டு சத்யா 19,162 வாக்குகளை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
அதேநேரம், திருநெல்வேலி மக்களவை தேர்தலில் போட்டியிட தொடக்கத்தில் சிம்லா முத்துச்சோழன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தார். வெளியூர்காரர் என்பதால் அவருக்கு ஆதரவு கிடைப்பதில் சிரமம் ஏற்படும் என்று கருதி பின்னர் உள்ளூரைச் சேர்ந்த வேட்பாளராக ஜான்சி ராணி நிறுத்தப்பட்டார். அவருக்கு ஆதரவாக அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி உள்ளிட்டோர் பிரச்சாரம் செய்திருந்தனர். காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட்புரூஸ், பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு கடும் சவாலாக அதிமுக இருக்கும் என்று கருதப்பட்டது. ஆனால் அதற்கு நேர்மாறாக 3 அல்லது 4-வது இடத்துக்கு நாம் தமிழர் கட்சி வேட்பாளருடன் போட்டியிடும் நிலைக்கு அதிமுக வேட்பாளர் தள்ளப்பட்டிருந்தார்
22-வது சுற்று முடிவில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சத்யாவைவிட 2,333 வாக்குகள் அதிகம் பெற்று 88,055 வாக்குகளை அதிமுக பெற்றிருந்தார். கடந்த 2019-ல் நடைபெற்ற மக்களவை தேர்தலில் இத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிட்ட மனோஜ்பாண்டியன் 3,37,273 வாக்குகளை பெற்று 2-ம் இடம்பெற்றிருந்தார்.
அதற்கு முந்தைய 2014 தேர்தலில் அதிமுக வேட்பாளர் கேஆர்பி பிரபாகரன் 3,98,139 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருந்தார். இதற்கு முந்தைய தேர்தல்களில் எல்லாம் கணிசமான வாக்குகளை பெற்றிருந்த அதிமுக இம்முறை குறைவான வாக்குகளை பெற்றுள்ளது அக் கட்சியினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.