நெற்பயிர் வெற்றிலை கொடிக்கால் சாய்ந்து நாசம்
தேவதானப்பட்டி பகுதிகளில் கனமழை அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர் வெற்றிலை கொடிக்கால் சாய்ந்து நாசம்
கனமழையால் அறுவடைக்கு தயாராக இருந்த 100-க்கும் மேற்பட்ட ஏக்கர் நெல் பயிர் மற்றும் வெற்றிலை கொடிக்கால் சாய்ந்து சேதம். நெல் விவசாயிகள் மற்றும் வெற்றிலை கொடிக்கால் விவசாயிகளுக்கு அரசு இழப்பீடு வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர்.தேனி மாவட்டம், தேவதானப்பட்டி அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக பலத்த காற்றுடன் கனமழை பெய்தது.
இதனால் பல்வேறு இடங்களில் சாலையோர மரங்கள் ஒடிந்து சேதம் ஏற்பட்டது. இந்நிலையில், பெரியகுளம் அருகே உள்ள மேல்மங்கலம் பகுதியில் 500க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலப்பரப்பில் நிலத்தடி நீரை பயன்படுத்தி இரண்டாம் போக கோடை நடவு செய்யப்பட்டு இருந்தது. தற்பொழுது அறுவடைக்கு 20 நாட்கள் உள்ள நிலையில் பலத்த காற்றுடன் நேற்று பெய்த கன மழையால் 100க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலப்பரப்பில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்கதிர்கள் அனைத்தும் நிலத்தில் சாய்ந்து நீரில் மூழ்கி சேதம் அடையும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் நெல் நடவு செய்த விவசாயிகள் செய்வதறியாது திகைத்து உள்ளனர்.
அதேபோல் ஜெயமங்கலம் பகுதியில் நடவு செய்யப்பட்ட வெற்றிலைக் கொடிக்கால் முற்றிலும் ஒடிந்து சேதம். வெற்றிலைக் கொடிக்கால் விவசாயத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு ரூ.10 லட்சத்துக்கும் மேல் இழப்பீடு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர். கனமழையால் நெல் மற்றும் வெற்றிலை விவசாயிகளுக்கு ஏற்பட்ட பாதிப்பிற்கு தமிழக அரசு இழப்பீடு தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.