ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் கூட்டம் குறைந்தது
ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைந்துள்ளதால் போக்குவரத்து நெரிசலில் இருந்து உள்ளூர் மக்கள் விடுபட்டுள்ளனர். சமவெளிப் பகுதிகளில் இம்முறை கடும் வெயில் நிலவியது.கடந்த ஏப்ரல் மற்றும் மே ஆகிய மாதங்களில் ஊட்டியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலை மோதியது.இதனால், லாட்ஜ், காட்டேஜ்கள், ஓட்டல்கள் அனைத்தும் சுற்றுலா பயணிகள் கூட்டதால் நிரம்பி வழிந்தன.
ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை நேற்று முன்தினம் வரை அதிகளவில் காணப்பட்டது. அதே போல் ஊட்டி நகர் மட்டுமின்றி, ஊட்டி – கோவை சாலைகளிலும் வாகன நெரிசல் ஏற்பட்டது. தமிழ்நாட்டில் பள்ளிகள் 10ம் தேதி திறக்கப்படும் நிலையில், தொடர்ந்து சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நேற்று முதல் கூட்டம் குறைந்துள்ளது.
இந்நிலையில், கடந்த இரு மாதங்களாக சுற்றுலா பயணிகள் வாகனங்களால் பிசியாக இருந்த ஊட்டி சாலைகளில் நேற்று வாகன நெரிசல் சற்று குறைந்து காணப்பட்டது.அதேபோல், பெரும்பாலான லாட்ஜ் மற்றும் காட்டேஜ்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் குறைந்தே காணப்பட்டது.சீசன் முடிந்து மூன்று நாட்களே ஆகும் நிலையில், ஓட்டல் மற்றும் காட்டேஜ்களில் அறைகளின் கட்டணங்களை உரிமையாளர்கள் குறைத்து விட்டனர்.
ஊட்டி நகரில் சுற்றுலா பயணிகள் குறைந்துள்ளதால் உள்ளூர் மக்கள் அனைத்து இடங்களுக்கும் வாகன நெரிசலில் சிக்கி தவிக்காமலும், சுற்றிக் கொண்டு செல்லாமல் நேரடியாக சென்று வர முடிவதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சுற்றுலா பயணிகள் வருகை குறைந்த நிலையில் தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா,படகு இல்லம் போன்ற பகுதிகளில் வழக்கத்தை காட்டிலும் குறைந்த அளவே சுற்றுலா பயணிகளை காண முடிந்தது.