எக்ஸ்பிரஸ் vs சூப்பர் ஃபாஸ்ட் என்ன வித்தியாசம்

வழக்கமாக நாம் நினைப்பதெல்லாம் சூப்பர் ஃபாஸ்ட் என்பது எக்ஸ்பிரஸ் ரயிலை விட வேகமாக செல்லும் என்பது தான். பாசஞ்சர் என்பது மிதமான வேகத்துடன் அனைத்து நிலையங்களிலும் நின்று செல்லும். எக்ஸ்பிரஸ் என்பது பாசஞ்சரை போல இல்லாமல் குறைவான நிறுத்தங்களுடன் அதிக வேகத்திலும், சூப்பர் ஃபாஸ்ட் என்பது எக்ஸ்பிரஸை விட குறைந்த நிறுத்தம் மற்றும் அதிக வேகத்துடன் செல்லும் என்று அனைவரும் நினைப்போம்.

ஒரு ரயில் பயணிக்கும் வேகமோ அல்லது குறைவான/நிறுத்தமோ அதை சூப்பர் ஃபாஸ்ட் என தீர்மானிப்பது இல்லை. உதாரணமாக சென்னை – கொல்லம் (16101) ரயில் சென்னை – திருச்சி இடையே 336 கிமீ தூரத்தை 5 நிறுத்தங்களுடன் 4 மணி நேரம் 50 நிமிடத்தில் கடக்கிறது, சில நேரம் அதைவிட குறைவான நேரத்தில் திருச்சி சென்று விடுகிறது. அடுத்து சென்னை – தூத்துக்குடி (12693) ரயில் இதே தொலைவை 8 நிறுத்தங்களுடன் 5 மணி நேரம் 15 நிமிடத்தில் கடக்கிறது.

ரயிலைப் பற்றி தெரியாதவர்களிடம் கேட்டால் நேரத்தையும் நிறுத்தத்தையும் வைத்து கொல்லம் ரயில் சூப்பர் ஃபாஸ்ட் எனவும், தூத்துக்குடி ரயில் எக்ஸ்பிரஸ் எனவும் சொல்வார்கள். ஆனால் நிலைமை அப்படியே தலைகீழ், உண்மையில் கொல்லம் ரயில் எக்ஸ்பிரஸ் வகை, தூத்துக்குடி ரயில் தான் சூப்பர் ஃபாஸ்ட். ஏன் இந்த முரண்பாடு எனப் பார்த்தால் ஒரு ரயில் எக்ஸ்பிரஸ் அல்லது சூப்பர் ஃபாஸ்ட் என்பதை நிறுத்தங்களை வைத்தோ அல்லது ரயில் பயணிக்கும் வழித்தடத்தில் நடுவில் உள்ள 2 நிலையங்களை கடக்க எடுக்கும் நேரத்தை வைத்தோ அல்லது செல்லும் வேகத்தை வைத்தோ கணக்கிடப்படுவதில்லை. மாறாக அந்த குறிப்பிட்ட ரயில் புறப்படும் – முடிவடையும் இடங்களுக்கு இடையே உள்ள மொத்த பயண தூரத்தை எவ்வளவு நேரத்தில் கடக்கிறது என்பதை வைத்தே முடிவாகிறது.

இந்திய ரயில்வேயில் ஒரு ரயிலின் சராசரி வேகம் 55 அல்லது அதற்கு மேல் இருந்தால் அது சூப்பர் ஃபாஸ்ட் ரயிலாக கணக்கில் கொள்ளப்படுகிறது. இடையில் உள்ள ஊர்கள் எல்லாம் கணக்கில் இல்லை. உதாரணமாக சென்னை – ராமேஸ்வரம் (22661) சேது ரயில் 600 கிமீ தூரத்தை 10 மணி நேரம் 25 நிமிடத்தில் கடக்கிறது. இதன் சராசரி வேகம் மணிக்கு 57+ கிமீ, அதேபோல் சென்னை – ராமேஸ்வரம் (16751) போட் மெயில் ரயில் 665 கிமீ தூரத்தை கடக்க 13 மணி நேரம் 5 நிமிடங்கள் எடுக்கிறது. இதன் சராசரி வேகம் 51+ கிமீ மட்டுமே. எனவே சேது ரயில் சூப்பர் ஃபாஸ்ட் ஆகவும், போட் மெயில் எக்ஸ்பிரஸ் ஆகவும் கணக்கில் கொள்ளப்படுகிறது.

பெரும்பாலானோர் ரயில்களின் இயக்கும் வேகம் மாறுபடும் என தவறாக நினைத்து விடுகிறார்கள். அதாவது பாசஞ்சர் ரயில்கள் 60-80 கிமீ வேகம், எக்ஸ்பிரஸ் 100 கிமீ, சூப்பர் ஃபாஸ்ட் 110-120 போகும் என எண்ணுகிறார்கள். உண்மை என்னவெனில் ஒரு ரயில் பாதையின் தாங்கும் திறன் தான் அந்த ரயிலின் வேகத்தை தீர்மானிக்கிறது, ரயிலின் நிறுத்தம் ஒரு கூடுதல் காரணம்.

பாசஞ்சர், எக்ஸ்பிரஸ், சூப்பர் ஃபாஸ்ட் என அனைத்து ரயில்களுமே 110 கிமீ வேகத்தில் செல்லும் திறன் கொண்டவை தான்.

ஒரு எக்ஸ்பிரஸ் ரயில் சூப்பர் ஃபாஸ்ட் ஆக மாறுவதால் கிடைக்கும் பலன் அந்த ரயில் எந்த ஊருக்கு இயக்கப்படுகிறதோ அந்த ஊருக்கு குறைந்த நேரத்தில் செல்லும் வகையில் அட்டவணை மாற்றப்படும், நடுவில் உள்ள ஊர்களுக்கு இதனால் பெரிய பலன் இருக்காது, ஆனால் ரயில் கட்டணம் என்பது இடையில் உள்ள ஊர்களுக்கும் சேர்த்தே அதிகரிக்கப்படும்.

Leave a Reply

Your email address will not be published.