கால்நடை மருத்துவ இளநிலைப் படிப்புகள்
: ஜூன் 3 முதல் விண்ணப்பம்!
தமிழ்நாடு கால்நடை மருத்துவ இளநிலைப் படிப்புகளுக்கு ஜூன் 3 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் 7 இடங்களில் கால்நடை மருத்துவக் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கல்லூரிகளில் ஐந்தரை ஆண்டுகள் கொண்ட கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு படிப்புகள் (பி.வி.எஸ்சி. – ஏ.ஹெச்.) உள்ளன.
இதைத் தவிர, திருவள்ளூா் மாவட்டம் கோடுவெளியில் உள்ள உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக் கல்லூரிகளில் உணவுத் தொழில்நுட்ப பட்டப்படிப்பு (பி.டெக்), பால்வளத் தொழில்நுட்ப பட்டப்படிப்பு (பி.டெக்), ஒசூா் மத்திகிரியில் உள்ள கோழியின உற்பத்தி மற்றும் மேலாண்மைக் கல்லூரியில் கோழியின தொழில்நுட்ப பட்டப்படிப்பு (பி.டெக்) உள்பட 3 பட்டப்படிப்புகள் உள்ளன.
இந்த 3 பட்டப் படிப்புகளும் 4 ஆண்டுகள் கொண்டவை.
இந்த நிலையில், பி.வி.எஸ்சி. – ஏ.ஹெச். மற்றும் பி.டெக் படிப்புகளுக்கான நிகழாண்டு மாணவர் சேர்க்கைக்கு https://adm.tanuvas.ac.in என்ற இணையம் மூலம் ஜூன் 3 ஆம் முதல் ஜூன் 21 ஆம் தேதி மாலை 5.00 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அயல்நாடு வாழ் இந்தியர், அயல்நாடு வாழ் இந்தியரின் குழந்தைகள், அயல்நாடு வாழ் இந்தியரின் நிதி ஆதரவு பெற்றோர் மற்றும் அயல்நாட்டினர் ஆகியோர்களுக்கான இட ஒதுக்கீடு, இணையதள விண்ணப்ப வழிமுறைகள் மற்றும் இதர விவரங்களை இணையதளத்தை பார்த்து அறிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.