பெண் யூடியூபர் உள்பட 3 பேர் அதிரடி கைது
ஆபாச கேள்வி பதிவேற்றத்தால் பட்டதாரி பெண் தற்கொலை முயற்சி; பெண் யூடியூபர் உள்பட 3 பேர் அதிரடி கைது: கீழ்ப்பாக்கம் போலீஸ் நடவடிக்கை
சென்னை வியாசர்பாடியை சேர்ந்தவர் ராணி(23)(பெயர் மாற்றப்பட்டுள்ளது). ராணியின் பெற்றோர் சிறு வயதில் இறந்துவிட்டனர். இதனால் அவரது அண்ணன் அரவணைப்பில் வளர்ந்து வருகிறார். பிஎஸ்சி நியூட்ரிசன் படித்து முடித்து கடந்த 3 ஆண்டுகளாக புரசைவாக்கத்தில் உள்ள பெண்கள் விடுதியில் தங்கி வேலை தேடி வருகின்றார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ராணி தனது தோழிகளுடன் கோயம்பேட்டில் உள்ள வி.ஆர்.மாலுக்கு சென்றுள்ளார். அப்போது, மாலுக்கு வந்த இளம் ெபண்களிடம் ‘வீரா டாக் டபுள் எக்ஸ்’ என்ற யூட்யூப் சேனல் நெரியாளர் சுவேதா என்பவர், ராணியை வழிமறித்து காதல் தொடர்பாக சில ஆபாசமாக கேள்விகளை கேட்டுள்ளார். அதற்கு ராணி வேடிக்கையாக பதில் அளித்துள்ளார். அப்போது நெரியாளர் சுவேதா இந்த பேட்டியை நாங்கள் யூடியூப் சேனலில் உங்கள் அனுமதியின்றி வெளியிடமாட்டோம் என்று உறுதி அளித்ததாக கூறப்படுகிறது.
இதற்கிடையே அந்த யூடியூப் சேனலில் ராணி காதல் தொடர்பாக ஆபாசமான கேள்விகளுக்கு சிரித்தபடி பேட்டி அளித்தது பொதுமக்களிடையே வைரலாக பரவியது. இது ராணியின் கவனத்திற்கு நண்பர்கள் மூலம் தெரியவந்தது. அதேநேரம், ராணியின் உறவினர்கள் பேட்டியை பார்த்து பொது வெளியில் இப்படி ஆபாசமாக பேசலாமா என கேட்டு கண்டித்துள்ளனர்.மேலும், ராணியின் பேட்டிக்கு எதிராக பலர் கடுமையான கருத்துக்களை பதிவிட்டு வந்துள்ளனர். இதை பார்த்து ராணி, கடந்த 2 நாட்களாக மிகவும் மனமுடைந்த நிலையில் இருந்துள்ளார். விஷயம் பெரிய அளவில் வெளியானதால் மனமுடைந்த ராணி கடந்த 27ம் தேதி எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதை பார்த்த சக தோழிகள் ராணியை மீட்டு சிகிச்சைக்காக கீழ்பாக்கம் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பின்னர் சம்பவம் குறித்து ராணி என் முன் அனுமதி இல்லாமல் பேட்டியை பொது வெளியில் பதிவிட்ட யூடியூப் சேனல் மற்றும் பேட்டி எடுத்த நெரியாளர் சுவேதா மீது கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் அளித்தார். அந்த புகாரின்படி, போலீசார் விசாரணை நடத்திய போது, ‘வீரா டாக்ஸ் டபுள் எக்ஸ்’ என்ற யூடியூப் சேனல் உரிமையாளரான வளசரவாக்கம் ஏகேஆர். நகரை சேர்ந்த ராம்(21), யூடியூப் சேனல் ஒளிப்பதிவாளர் யோகராஜ் (21), தொகுப்பாளர் சுவேதா(23) ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து அதிரடியாக கைது செய்தனர். மேலும் ராணியின் பேட்டிக்கான வீடியோவும் யூடியூப் சேனலில் இருந்தும் நீக்கப்பட்டது.