நெல்லை மாவட்ட அரசு பள்ளிகளுக்கு இலவச பாட புத்தகங்கள், நோட்டுக்கள்
நெல்லை மாவட்ட அரசு பள்ளிகளுக்கு இலவச பாட புத்தகங்கள், நோட்டுக்கள் அனுப்பி வைக்கப்பட்டன
நெல்லை மாவட்ட அரசு பள்ளிகளுக்கு இலவச பாட புத்தகங்கள் மற்றும் நோட்டுக்கள் நேற்று மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப பிரித்து அனுப்பப்பட்டன. மாவட்டம் முழுமைக்கும் ஒரே மையம் காரணமாக ஆசிரிய, ஆசிரியைகள் அவற்றை கொண்டு செல்வதில் சிரமங்களை எதிர்கொண்டனர்.தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து மாணவ, மாணவிகளுக்கு பள்ளிகள் வரும் ஜூன் 6ம் தேதி திறக்கின்றன. பள்ளிகள் திறந்த அன்றே மாணவ, மாணவிகளுக்கு இலவச பாட புத்தகங்கள் மற்றும் நோட்டுக்களை வழங்கிட அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. இதற்காக இலவச புத்தகங்கள் மற்றும் நோட்டுக்களை பிரித்து அனுப்பும் பணிகள் தற்போது முடுக்கிவிடப்பட்டுள்ளன.
நெல்லை மாவட்டம் முழுமைக்கும் மாணவ, மாணவிகளுக்கு தேவையான நோட்டு, புத்தகங்கள் பேட்டை காமராஜர் மேல்நிலைப்பள்ளியில் வந்து இறங்கியுள்ளன. அங்கிருந்து ஒவ்வொரு பள்ளிக்கும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப நோட்டு புத்தகங்கள் பிரித்து அனுப்பப்பட்டு வருகின்றன. நெல்லை மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்களை வழங்கிடும் வகையில், அந்தந்த பள்ளிகளின் ஆசிரியர்கள் ஒரு குழுவாக நேற்று நெல்லைக்கு வந்து வாடகை வாகனங்களில் புத்தகங்களை பெற்று சென்றனர்.
கல்வி அலுவலக அதிகாரிகள் 6 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளின் மொத்த எண்ணிக்கையை சரிபார்த்து, அதற்கேற்ப நோட்டுக்கள் மற்றும் புத்தகங்களை ஆசிரியர்கள் கையில் ஒப்படைத்தனர். நெல்லை கல்வி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் பேட்டை காமராஜர் பள்ளியிலே இலவச சீருடைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. வள்ளியூர் மற்றும் சேரன்மகாதேவி கல்வி மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கான இலவச சீருடைகள் அந்தந்த கல்வி மாவட்ட அளவில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.