லஞ்ச ஒழிப்புத்துறை அதிர்ச்சி தகவல்
அதிமுக ஆட்சியில் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் மாபெரும் ஊழல்:
அதிமுக ஆட்சியின்போது பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் பல கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது அம்பலமாகியுள்ளது. 2016 முதல் 2020 வரை பிரதமர் வீட்டு வசதி திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் பல கோடி ரூபாய் முறைகேடு செய்தது அம்பலமாகியுள்ளது. முறைகேட்டில் ஈடுபட்டதாக ஊரக வளர்த்துறை அதிகாரிகள் 50 பேர் மீது தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. கட்டாத வீடுகளுக்கு நிதி வழங்கியதும் வீடு பெற தகுதியற்ற நபர்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்ததும் விசாரணையில் தெரிய வந்தது.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஊராட்சிக்கு உட்பட்ட சானாபுத்தூரில் நடந்த முறைகேடு தொடர்பாக 10 அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சானாபுத்தூர் ஊராட்சி முன்னாள் செயலாளர் பிர்லா, கும்மிடிப்பூண்டி முன்னாள் பிடிஓக்கள் ராஜேந்திரன், ரவி, அருள், கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றிய முன்னாள் பொறியாளர்கள் எம்.நரசிம்மன், எம்.எஸ்.சதாசிவம், எம்.கோவிந்தராஜ், கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றிய முன்னாள் மண்டல வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரசேகர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்ட 144 வீடுகளுக்கான நிதியில் ரூ.31.66 லட்சம் கையாடல் செய்ததாக புகார் எழுந்தது. ஏற்கனவே தொகுப்பு வீடுகள் பெற்றுள்ள 21 பேருக்கு மீண்டும் வீடு ஒதுக்கீடு செய்து மோசடி நடந்துள்ளது. 46 பயனாளிகளுக்கு தொகுப்பு வீடுகள் கட்டாமலேயே கட்டப்பட்டதாக போலி ஆவணம் தயாரித்து நிதி வழங்கப்பட்டுள்ளது. நாகை கீழ்வேளூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட ஆதமங்கலம், கோவில்கண்ணாப்பூர் உள்ளிட்ட கிராமங்களில் பிரதமர் வீட்டு வசதி திட்டத்திலும் முறைகேடு நடந்துள்ளது.
கீழ்வேளூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட கொடியாலத்தூர், பட்டமங்கலம், தெற்கு பனையூர் மற்றும் வலிவலம் ஊராட்சிகளிலும் முறைகேடு நடந்தது. நாகை மாவட்டத்தில் 7 கிராமங்களில் ரூ.2 கோடி அளவுக்கு பணம் கையாடல் செய்யப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது. நாகை மாவட்டத்தில் பிடிஓக்கள் உள்பட 10 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கீழ்வேளூர் முன்னாள் பிடிஓக்கள் அன்பரசு, அருள்மொழி, திருமலைக்கண்ணன், கீழ்வேளூர் ஊராட்சி ஒன்றிய முன்னாள் இளநிலை பொறியாளர், கீழ்வேளூர் முன்னாள் துணை பிடிஓக்கள் சரவணன், சேகர், கீழ்வேளூர் முன்னாள் ஒன்றிய பணி மேற்பார்வையாளர்கள் பாலச்சந்திரன், செல்வம், முன்னாள் துணை பிடிஓ ராஜகோபால் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது.