மேற்கு வங்கம்: 77 சாதிகளின் ஒபிசி அந்தஸ்து ரத்து, சிதையும் கனவுகள் – வலுக்கும் அரசியல் சர்ச்சை
“அடுத்த ஆண்டின் மாநில நிர்வாகப் பணித் தேர்வுக்கு நான் தயார் செய்து கொண்டிருந்தேன். ஆனால் நீதிமன்றத் தீர்ப்பு என் கனவைச் சிதைத்துவிட்டது. இப்போது பொதுப் பிரிவில் வேலை கிடைப்பது கடினம். அரசு எதுவும் செய்யவில்லையென்றால் அரசு வேலை என்ற என் கனவு நனவாக முடியாது,” என்று கூறுகிறார் 25 வயதான முகமது ஷபிகுல்லா. மூன்று ஆண்டுகளுக்கு முன் பட்டப் படிப்பை முடித்ததில் இருந்து அரசு வேலைக்காக அவர் தயார் செய்து வருகிறார்.
இது ஷபிகுல்லாவின் நிலைமை மட்டுமல்ல. 2010க்குப் பிறகு வழங்கப்பட்ட இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC) சான்றிதழ்கள் அனைத்தையும் ரத்து செய்யும் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பிற்குப் பிறகு, அவரைப் போன்ற ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தங்கள் எதிர்காலம் நிச்சயமற்றதாகிவிட்டதாக உணர்கிறார்கள்.
இருப்பினும் இட ஒதுக்கீட்டைப் பயன்படுத்தி அரசுப் பணிகளில் சேர்ந்தவர்கள் அல்லது தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு இது எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்று நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.
ஆனால் பதவி உயர்வில் இடஒதுக்கீட்டின் பலனைப் பெற முடியாமல் போகலாம் என்பதுதான் இப்போது இவர்களின் கவலை.