திருச்சி மாவட்டத்தில் 24.49 கோடி பெண்கள் பயன்
கட்டணமில்லா இலவச பேருந்து பயணம் திருச்சி மாவட்டத்தில் 24.49 கோடி பெண்கள் பயன்
திருச்சி மாவட்டத்தில் இதுவரை 24.49 கோடி மகளிர் நகர பஸ்களில் கட்டணமில்லா பயணம் மேற்கொண்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னர், சட்டமன்ற தேர்தலின் போது அளித்த வாக்குறுதியின்படி, 5 முக்கிய திட்டங்களுக்கு கையெழுத்திட்டார்.
இதில், மகளிருக்கான கட்டணமில்லா பஸ் பயண திட்டம் முக்கியத்துவம் வாய்ந்தது. இத்திட்டத்தின்படி அரசு நகர பஸ்களில் பயணம் செய்யும் இல்லத்தரசிகள், உயர்கல்வி பயிலும் மாணவிகள், பணிபுரியும் பெண்கள் உள்ளிட்ட அனைத்து மகளிரும் கட்டணமில்லா பயணம் செய்ய வழிவகை செய்யப்பட்டது. இத்திட்டத்தால், பெண்கள் பொருளாதார ரீதியாக முன்னேற்றம் அடைந்து வருவதாக பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர். தமிழகத்தை பின்பற்றி கர்நாடகா, தெலுங்கனா, கேரளா, டெல்லி, பஞ்சாப் ஆகிய மாநிலங்களிலும் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரை, அனைத்து தரப்பு மக்களிடத்திலும், இத்திட்டம் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. பணிபுரியும் பெண்கள் மட்டுமின்றி, சுயதொழில் செய்யும் பெண்கள், இலவச பயிற்சி வகுப்புகளுக்கு செல்லும் பெண்கள், குழந்தைகளை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் தாய்மார்கள், குழந்தைகளை நாள்தோறும் பள்ளிகளுக்கு அழைத்து செல்லும் பெண்கள், வயதான முதியவர்கள் மற்றும் திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகளுக்கு இத்திட்டம் மிகுந்த பயனுள்ளதாக அமைந்துள்ளது.