தமிழகம் மற்றும் கேரளா இடையே உள்ள முல்லை பெரியாறு அணையின் தரம்
தமிழகம் மற்றும் கேரளா இடையே உள்ள முல்லை பெரியாறு அணையின் தரம் காலாவதியாகிவிட்டது என்றும், இயற்கை சீற்றங்களால் அணை உடைந்தால் அதன் சுற்று வட்டாரத்திலுள்ள மக்கள் பாதிப்புக்குள்ளாவார்கள் என கேரள அரசு தொடர்ந்து அறிவித்து வருகின்றது. மேலும் உடனடியாக முல்லை பெரியாறுக்கு பதிலாக புதிய அணை கட்ட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. இதில் அணை குறித்து ஏற்கனவே வல்லுனர்களை கொண்டு ஆய்வு நடத்தி உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் கடந்த 2018ம் ஆண்டு உச்சநீதிமன்றம் பிறப்பித்திருந்த உத்தரவில், ‘முல்லை பெரியாறு அணை தொடர்பான விவகாரத்தில் ஒன்றிய அரசு, தமிழ்நாடு மற்றும் கேரளா ஆகிய 3 மாநிலங்களும் தனித்தனியாக புதிய சிறப்புக்குழு ஒன்றை அமைக்க வேண்டும். இதில் இரு மாநிலங்களும் மத்திய குழுவுடன் ஒன்றிணைந்து அணை பேரிடர் மேலாண்மை திட்டத்தில் செயல்பட வேண்டும்.
ஒன்றிய அரசு அமைக்கும் குழுவில் இரு மாநிலத்தை சேர்ந்த பிரதிநிதிகளும் இடம்பெற வேண்டும். இயற்கை பேரிடர் காலத்தில் பொதுமக்களை பாதுகாக்கும் விதமாக முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை இந்த சிறப்பு குழு துரிதமாக மேற்கோள்ள வேண்டும். இதில் அணை முழு பாதுகாப்போடு இருப்பதால் புதிய அணை கட்ட வேண்டிய அவசியம் இல்லை என்று தெளிவாக தெரிவித்திருந்தது. அதனையும் மீறி முல்லை பெரியாறு பகுதியில் புதிய அணை கட்ட கேரளா அரசுக்கு ஒன்றிய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த நடவடிக்கைக்கு எதிராக ஒன்றிய அரசு, கேரளா அரசுக்கு எதிராக தமிழ்நாடு அரசு கடந்த 2019, ஜனவரி 4ம் தேதி தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இதுபோன்ற சூழலில் முல்லை பெரியாறு பகுதியில் புதிய அணை கட்டுவது தொடர்பாக ஒன்றிய அரசு கொடுத்துள்ள ஒப்புதல் குறித்து உடனடியாக பரிசீலிக்க வேண்டும் என்று கேரளா அரசு தரப்பில் ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் விண்ணப்பம் கொடுத்து கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக வரும் 28ம் தேதி நடக்க இருக்கும் ஒன்றிய சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டு குழு கூட்டத்தில் பரிசீலிக்கப்பட உள்ளதாக, ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் முல்லைப் பெரியாறு விவகாரத்தில் மேற்பார்வை குழுவின் முடிவே இறுதியானது என்று உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது. அதேபோன்று தமிழ்நாடு அரசு சம்மதம் இருந்தால் மட்டுமே முல்லை பெரியாறின் கீழே புதிய அணை கட்ட முடியும் என்றும், இல்லையேல் சாத்தியமே கிடையாது என ஒன்றிய அரசு மாநிலங்களைவையில் திட்டவட்டமாக தெரிவித்திருந்தது.
இவை அனைத்தையும் மீறும் விதமாக முல்லை பெரியாறு பகுதியில் புதிய அணை கட்டுவது தொடர்பாக கேரளாவுக்கு வழங்கிய ஒப்புதல் குறித்து வரும் 28ம் தேதி ஒன்றிய சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டு குழு கூட்டத்தில் பரிசீலிக்கப்பட உள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது உச்ச நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவுகள் அனைத்தியும் மீறும் செயல் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.