வி.கே.பாண்டியன் பதிலடி
பூரி ஜெகன்நாதர் கோயிலின் புதையல் அறை சாவிகளை முடிந்தால் பிரதமர் மோடியே கண்டுபிடித்து தரட்டும் :
பூரி ஜெகன்நாதர் கோயிலின் புதையல் அறை சாவிகளை முடிந்தால் பிரதமர் மோடியே கண்டுபிடித்து தரட்டும் என்று தமிழ்நாட்டைச் சேர்ந்த வி.கே.பாண்டியன் பதிலடி கொடுத்துள்ளார். ஒடிசாவின் கட்டாக் பகுதியில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய பிரதமர் மோடி, பிஜு ஜனதா தளத்தின் முக்கிய பொறுப்பில் இருக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி வி.கே. பாண்டியனை கடுமையாக விமர்சித்தார். 6 ஆண்டுகளாக பூட்டப்பட்டுள்ள பூரி ஜெகன்நாதர் கோயிலின் புதையல் அறை சாவிகளை அவர் தமிழ்நாட்டிற்கு எடுத்துச் சென்றுவிட்டதாக குற்றம் சாட்டினார்.
இதற்கு பதிலடி கொடுத்துள்ள வி.கே.பாண்டியன், அளவற்ற அறிவாற்றலை பெற்றுள்ள பிரதமர் மோடி,பூரி ஜெகன்நாதர் கோயிலின் புதையல் அறையில் தொலைந்து போன சாவிகளை கண்டுபிடித்து கொடுக்க வேண்டும் என்று தெரிவித்தார். மதத்தை வைத்து பிரச்சாரம் செய்யும் மோடியின் எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது என்றும் ஒடிசா மக்கள் அறிவாற்றல் உடையவர்கள் என்றும் வி.கே.பாண்டியன் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், கோவிலின் புதையல் அறை கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக மூடப்பட்டு இருப்பதாக குறிப்பிட்டார். கடந்த 2018ம் ஆண்டு ஒடிசா உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் அந்த அறையை ஆய்வு செய்த போதுதான் சாவிகள் காணாமல் போனது தெரியவந்தது என்றும் அசல் சாவிகள் தொகுப்பு இல்லை என்றாலும் நகல் சாவிகள் இருப்பதால் மாநில நிர்வாகத்தால் நிர்ணயிக்கப்படும் தேதியில் புதையல் அறையின் கதவை திறக்கலாம் என ஓடிசா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.