ஊறவைத்த முனக்காவை குங்குமப்பூவுடன் சேர்த்து உண்பதால் உண்டாகும் ஆரோக்கிய நன்மைகள்
முனக்கா (Dried Black Graph) நம் உடலுக்கு பலவிதமான நன்மைகளைத் தரக்கூடிய ஓர் உலர் பழம். இதில் நார்ச்சத்து, இரும்புச்சத்து, சிங்க், பாஸ்பரஸ், மக்னீசியம், கால்சியம், பொட்டாசியம், வைட்டமின் C, தியாமின், ரிபோஃபிளேவின் போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகளவில் நிறைந்துள்ளன. இதிலுள்ள பிரக்டோஸ் மற்றும் செறிவூட்டப்பட்ட ஊட்டச்சத்துக்கள், இதை கருப்பு திராட்சை பழத்தை விட மிகுந்த ஆரோக்கியமானதாக ஆக்குகிறது.
எண்ணிலடங்கா ஊட்டச் சத்துக்களைத் தன்னகத்தே கொண்டுள்ள குங்குமப்பூ ‘கோல்டன் ஸ்பைஸ்’ என அழைக்கப்படுகிறது. இதில் குரோசின், குரோசெடின் மற்றும் ஸஃப்ரானல் போன்ற கூட்டுப்பொருட்கள் உள்ளன. இவை ஆன்டி ஆக்ஸிடன்ட், ஆன்டி இன்ஃபிளமேட்டரி மற்றும் ஆரோக்கியமான மனநிலையை தரக்கூடிய குணங்களைக் கொண்டவை. முனக்காவுடன் ஸஃப்ரான் சேரும்போது அந்தக் காம்பினேஷனிலிருந்து கிடைக்கும் ஊட்டச்சத்துக்களின் அளவு உச்சமடைகிறது.
முனக்காவிலுள்ள இரும்புச்சத்து இரத்தத்தின் ஹீமோகுளோபின் உற்பத்தியை அதிகரிக்க உதவி புரிந்து சிவப்பு அணுக்களின் அளவை உயர்த்துகிறது. இரும்புச்சத்து உடலுக்குள் உறிஞ்சப்படுவதற்கு ஸஃப்ரான் உதவுகிறது. இதன் மூலம் அனீமியா நோய் குணமடைகிறது.
முனக்காவை இரவில் ஊற வைத்து மறுநாள் உண்ணும்போது அது நல்ல மிருதுத்தன்மையடைந்திருக்கும். சுலபமாக ஜீரணமாகும். அதனுடன் ஸஃப்ரானை சேர்த்து உண்ணும்போது ஜீரணம் சிறப்படைவதுடன், வீக்கம், அஜீரணம் மற்றும் வாய்வு உற்பத்தி போன்ற வயிற்றுக் கோளாறுகள் வருவது தடுக்கப்படுகிறது. இந்த இரண்டின் கூட்டணி ஜீரண உறுப்புகளிலிருக்கும் நன்மை தரும் நுண்ணுயிரிகளின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உதவிபுரிந்து மொத்த ஜீரண உறுப்புகளின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.