சையத் இப்ராஹிம் ரைசி மறைவிற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்
ஈரான் அதிபர் மரணச் செய்தி அறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்:
அஜர்பைஜான் ஜனாதிபதி இல்ஹாம் அலியுடன் இணைந்து இருநாட்டு முயற்சியில் கட்டப்பட்டு வரும் அணையை திறப்பதற்காக அஜர்பைஜான்- ஈரான் எல்லையின் கீழ் ஈரான் அதிபர் சென்றிருந்தார். அங்கு நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுவிட்டு திரும்பியபோது ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஈரானின் அதிபர் இப்ராஹிம் ரைசி, அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் மற்றும் ஈரானின் கிழக்கு அஜர்பைஜான் மாகாண ஆளுநர் மற்றும் பிற அதிகாரிகள், காவலர்கள் உள்ளிட்டோர் விபத்தில் உயிரிழந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
நேற்றைய தினம் மீட்பு பணியானது நடைபெற்றுவந்த நிலையில் இன்று காலை ஹெலிகாப்டர் முற்றும் எரிந்து நாசமாகி இருப்பதாகவும் விபத்தில் சிக்கியவர்கள் அனைவரும் உயிரிழந்ததாகவும் அதிகார பூர்வணமாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் ஈரான் அதிபர் மறைவிற்கு பிரதமர் நரேந்திரமோடி இரங்கல் தெரிவித்துள்ளார். ஈரான் அதிபர் டாக்டர். சையத் இப்ராஹிம் ரைசியின் சோகமான மறைவால் ஆழ்ந்த வருத்தமும், அதிர்ச்சியும் அடைந்துள்ளேன். இந்தியா – ஈரான் இருதரப்பு உறவை வலுப்படுத்த அவரது பங்களிப்பு எப்போதும் நினைவுகூரப்படும். சையத் இப்ராஹிம் ரைசியின் குடும்பத்தினருக்கும், ஈரான் மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த துயரமான நேரத்தில் இந்தியா ஈரானுடன் துணை நிற்கிறது என பிரதமர் நரேந்திரமோடி தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.