டெல்லி போலீசார் பதிலளிக்க உத்தரவு
தேர்தல் பரப்புரையில் வெறுப்பு கருத்துகளை பேசிய பிரதமர் மோடி மீதான புகாரில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? :
பிரதமர் மோடி மீதான புகாரில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்று டெல்லி போலீசார் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் ராஜஸ்தானில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில், “காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில், தாய்மார்கள், சகோதரிகளிடம் இருக்கும் தங்கத்தை கணக்கெடுத்து அதை மற்றவர்களுக்கு கொடுப்போம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது நகர்புற நக்சல் மனப்பான்மை. தாய்மார்களே, சகோதரிகளே உங்கள் மாங்கல்யத்தை கூட விடமாட்டார்கள். அந்த அளவுக்கு தரம் தாழ்த்து நடப்பார்கள். மன்மோகன்சிங் சொன்னபடி, சிறுபான்மையினருக்கு தான் நாட்டின் சொத்தில் முதல் உரிமை என்றால், அந்த நகைகளை யாருக்கு கொடுப்பார்கள். அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்ளும் முஸ்லிம்களுக்கு, ஊடுருவல்காரர்களுக்குதான் அந்த நகைகள் தரப்படும் என்று பேசினார்.
இதையடுத்து மதக் கலவரத்தை தூண்டும் வகையில் தேர்தல் பிரச்சாரம் செய்து வரும் பிரதமர் மோடி மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டன. அந்த வரிசையில் மனுதாரர் குர்பான் அலி தாக்கல் செய்த வழக்கு தெற்கு டெல்லி மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது பெருநகர மாஜிஸ்திரேட் (எம்எம்) கார்த்திக் தபரியா வழக்கு தொடர்பாக பல்வேறு கேள்விகளை எழுப்பினார். தேர்தல் பரப்புரையில் வெறுப்பு கருத்துகளை பேசிய பிரதமர் மோடி மீது அளிக்கப்பட்ட புகாரில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? இதே விவகாரத்தில் வேறு புகார்கள் வந்துள்ளதா?. விசாரணை நிலை என்ன? உள்ளிட்ட கேள்விகளுக்கு டெல்லி போலீஸ் பதிலளிக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து வழக்கு ஜூன் 5ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.