புதுச்சேரியில் இளைஞர்களை சீரழிக்கும் ஹான்ஸ், கூல்லிப்
புதுச்சேரியில் மாணவர்கள் மற்றும் இளைஞர்களை சீரழிக்கும் ஹான்ஸ், கூல்லிப் போன்ற போதை வஸ்துகள் சிறிய கடைகளில் விற்கப்படுவதாகவும், அதை வாங்கி கொண்டு வந்த புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் அவர்கள் தலைமையில் அதிமுகவினர் சட்டப்பேரவையில் முதலமைச்சர் ரங்கசாமியிடம் காண்பித்து இதுபோன்ற போதை வஸ்துக்களை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்தனர்.
அதன்பின் அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் செய்தியாளர்களிடம் கூறுகையில், புதுச்சேரி மாநிலம் முழுவதும் கஞ்சா, ஹான்ஸ், கூல்லிப், பிரவுன் சுகர் உள்ளிட்ட போதை பொருட்கள் தங்கு தடையின்றி விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவ கல்லூரிகள், பல்கலைக்கழக பகுதிகள், சுற்றுலா பயணிகள் அதிகம் கூடும் இடங்களை குறிவைத்து இந்த போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. கடந்த 3 மாதத்திற்கு முன்பு ஆர்த்தி என்கிற 9 வயது சிறுமி கஞ்சா உபயோகிப்பவர்களால் கடத்தி பாலியல் வன்முறை செய்து படுகொலை செய்யப்பட்டார்.
கஞ்சா விற்பனையை தடுக்க வலியுறுத்தி கழகத்தின் பொதுச்செயலாளர், புரட்சித்தமிழர், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர், மாண்புமிகு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடியார் அவர்களின் ஆணைப்படி,மக்களின் நலனுக்காக அதிமுக பந்த் போராட்டம் நடத்தியது. ஆனாலும் புதுச்சேரி மாநிலம் முழுவதும் கஞ்சா விற்பனையை தடுக்கப்படவில்லை.
குறிப்பாக பள்ளிகள், கல்லூரிகள், மாணவர்கள் தங்கும் விடுதிகள், நடைபாதையில் வைத்துள்ள சிறிய பெட்டி கடைகள், ரெஸ்டோ பார்கள் ஆகியவற்றில் இந்த போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
புதுச்சேரி மாநிலம் முழுவதும் தங்கு தடையின்றி போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதை மாண்புமிகு முதலமைச்சர் அவர்களிடம் சுட்டிக்காட்டவும், போதை விற்பனையை முழுமையாக தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் அதிமுக சார்பில் கஞ்சா, ஹான்ஸ், கூல்லிப்ஸ் உள்ளிட்ட பல போதை பொருட்களை விற்பனை செய்யப்படும் கடைகளில் இருந்து பெற்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளோம். இந்த போதை விற்பனையை தடுக்க அரசு உரிய நடவடிக்கையை எடுக்கும் என எங்களிடம் முதலமைச்சர் தெரிவித்தார். ஆனாலும் காவல்துறையின் அலட்சியப்போக்கே போதை விற்பனை நடப்பதற்கு முதல் காரணமாகும்.
நிகழ்கால மாணவர்கள், இளைஞர்கள் தங்களது எதிர்கால வாழ்க்கையை தொலைத்து இந்த போதைக்கு அடிமையாகியுள்ளனர்.
நேற்று முன்தினம் சென்னை விமான நிலையத்தில் பலகோடி ரூபாய் பெருமானமுள்ள போதை பொருட்கள் பிடிபட்டுள்ளது. அதில் சுமார் 2 கோடி ரூபாய் மதிப்புள்ள போதை பொருள் பார்சல் புதுச்சேரி உள்ள ஒரு நபரின் விலாசத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. அந்த போதை பொருள் பார்சல் புதுச்சேரியில் யாருக்கு அனுப்பப்பட்டுள்ளது.அந்த நபர் யார் என்று கூட இதுவரை புதுச்சேரி காவல்துறை கண்டுபடிக்கவில்லை.
இதன் மீது டிஜிபி அவர்களும், மாண்புமிகு முதலமைச்சரும், துணைநிலை ஆளுநர் அவர்களும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் மாநில கழக அவைத்தலைவர் அன்பானந்தம், மாநில கழக பொருளாளர் ரவி பாண்டுரங்கன், மாநில அண்ணா தொழிற்சங்க பேரவைச் செயலாளர் பாப்புசாமி ஆகியோர் உடனிருந்தனர்.