நீரிழிவு அபாயத்தை முன்னரே கண்டறியலாம்
‘சர்க்கரை நோய் வரவிருக்கும் அபாயத்தை முன்கூட்டியே கண்டுபிடிக்கலாம்‘ என்று புதிய வழிமுறை ஒன்றைக் கூறியிருக்கிறது இந்தியாவில் நீரிழிவு தொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் RSSDI அமைப்பு.
வழக்கமாக சர்க்கரை நோயைக் கண்டறிய வெறும் வயிற்றில், காலை வேளையில் ரத்தப் பரிசோதனை எடுத்துப் பார்ப்பது வழக்கம். அதேபோல் உணவுக்குப் பிறகு 2 மணி நேரம் கழித்தும் பரிசோதனை நடக்கும்.
நிரீழிவைக் கண்டறிவதற்கான இந்தப் பரிசோதனை முறைகளைப் போல, வரும் முன்னர் நீரிழிவைக் கண்டுபிடிப்பதற்கான வழிமுறையைக் கூறியிருக்கிறது RSSDI.
குளுக்கோஸ் பானம் பருகிய ஒரு மணி நேரத்துக்குப் பிறகு, ரத்தப் பரிசோதனை எடுத்துப் பார்ப்பதன் மூலம், ஒருவருக்கு சர்க்கரை நோய் வருவதற்கான சாத்தியங்களை அறிய முடியும் என்று இந்தப் புதிய ஆராய்ச்சி கூறியுள்ளது.
‘ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பதை ‘ஹைப்பர்கிளைசீமியா’ (Hyperglycemia) என்கிறோம். முன்கூட்டியே இந்த ஹைப்பர்கிளைசீமியாவை கண்டறிவதன் மூலம் நீரிழிவு வருவதன் அபாயத்தையும் முன்கூட்டியே கண்டறிய முடியும். குளுக்கோஸ் பானம் அருந்திய ஒரு மணி நேரத்துக்குப் பிறகு, எடுக்கப்படும் இந்தச் சோதனையில் 155mg/dL என்கிற அளவுக்கு மேல் சோதனை முடிவு பெறப்பட்டால், அது சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலையான ‘ப்ரீடயாபட்டீஸ்’ (Prediabetes) என்று புரிந்துகொள்ளலாம். இப்படி முன்கூட்டியே கண்டுபிடித்துவிட்டால் அடுத்தது டயாபட்டீஸ் என்ற நிலைக்குச் செல்லாமல் சர்க்கரை அளவைத் தடுக்க முடியும். ஆரோக்கியமான அளவில் சர்க்கரை அளவைப் பராமரிப்பதற்கான எச்சரிக்கையாகவும் அமையும்’ என்கிறார்.