1,000 ஸ்கைப் கணக்குகள் முடக்கம்

இணையக் குற்றச் செயல்களில் ஈடுபட்ட 1,000 ஸ்கைப் கணக்குகள் முடக்கம்

புதுடெல்லி: இணையக் குற்றச்செயல்களுக்குப் பயன்படுத்தப்பட்ட ஆயிரத்திற்கு மேற்பட்ட ஸ்கைப் கணக்குகளை அரசாங்கம் முடக்கியுள்ளது.

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துடன் இணைந்து இந்திய அரசாங்கத்தின் இணையக் குற்றத் தடுப்பு ஒருங்கிணைப்பு மையம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக மத்திய அமைச்சு தெரிவித்துள்ளது.

மிரட்டிப் பணம் பறித்தல், கணினி, கைப்பேசிகளை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து மிரட்டுவது போன்ற குற்றச் செயல்களுக்காக இந்த ஸ்கைப் கணக்குகள் பயன்படுத்தப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

இணையக் குற்றங்களில் பாதிக்கப்பட்டோர் தேசிய இணையக் குற்றத் தடுப்பு இணையத்தளத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

காவல் துறை அதிகாரி, அமலாக்கத் துறை அதிகாரி, சிபிஐ, போதைப்பொருள் தடுப்புப் பிரிவு, ரிசர்வ் வங்கி அதிகாரி போல நடித்து தங்களை மிரட்டியதாக அந்தப் புகார்களில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதுபோன்ற குற்றச் செயல்களில் பெரும்பாலும் ஸ்கைப் போன்ற செயலிகள் பயன்படுத்தப்படுவதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.