வெற்றிக்கு வித்திடும் குலதெய்வ வழிபாடு
ஒருவரை மூன்று தெய்வங்கள் காப்பதாக நம் முன்னோர்கள் கூறுகின்றனர். அவை, நாம் இருக்கின்ற பகுதியில் உள்ள காவல் தெய்வம் என்று சொல்லக்கூடிய எல்லை தெய்வம். சில தெய்வங்கள் சிலருக்குப் பிடித்து, அடிக்கடி அந்த தெய்வத்தை வழிபடும் பழக்கம் உள்ளவர்களாக இருப்பதால், வரும் இஷ்டதெய்வம். ஒருவரின் தலைமுறைகளையும், குடும்பத்தையும் காக்கும் குலதெய்வம். மூன்று தெய்வங்களில், உங்களையும் உங்கள் குடும்பத்தையும், உங்கள் சந்ததியையும் எப்பொழுதும் அனுகிரகித்துக் காத்து நிற்பது மட்டுமின்றி, உங்கள் வாரிசுகளும் தழைத்து நிற்கவும், தலைமுறை தலைமுறையாக சிருஷ்டித்து, வாரிசுகளைக் கொண்டு வரும் தெய்வம் குலதெய்வமாகும். தொடர்ந்து, நம்மை பின்தொடர்ந்து காத்து நிற்பதற்குத் துணை நிற்கக்கூடிய தெய்வம், நம்மை என்றும் வளர்த்துக்கொண்டே இருக்கும். இடர்பாடுகளும், பிரச்னைகளும் வரும் தருணத்தில், நம்மை விழிப்படைய செய்து, அந்த பிரச்னைகளிலிருந்து காப்பாற்றுவதே கடமையாகக் கொண்டுள்ளது.