டீ காபி அருந்துவது ஆபத்தா…?

உணவுக்கு முன்பும் பின்பும் டீ மற்றும் காபி அருந்துவதை தவிர்க்குமாறு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிவுறுத்தியுள்ளது.

இந்தியர்கள் அதிகம் விரும்பி அருந்தும் பானங்களில் டீ மற்றும் காபி முதலிடம் வகிக்கின்றன.

வெயில், குளிர், மழை என எந்த பருவநிலையாக இருந்தாலும் இந்திய மக்களில் பெரும்பாலானோர் டீ மற்றும் காபி குடிப்பதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.

இந்நிலையில், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அதன் கிளை அமைப்பான தேசிய ஊட்டச்சத்து நிறுவனத்துடன் இணைந்து தற்போது இந்திய மக்களுக்கான 17 உணவு வழிகாட்டுதல்களின் தொகுப்பை வெளியிட்டுள்ளது. அதில் டீ மற்றும் காபி குடிக்கும் பழக்கம் அளவாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :

“டீ மற்றும் காபியில் காஃபின் கலந்திருப்பதால்,
அது மத்திய நரம்பு மண்டலத்தையும் மற்றும் உடலியல் சார்புநிலையைத் தூண்டுகிறது.

ஆனால், டீ, காபியை முற்றிலுமாக தவிர்க்குமாறு குறிப்பிடப்படவில்லை. அவற்றில் காஃபின் கலந்திருப்பதால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

ஒரு 150 மி.லி. காய்ச்சிய காபியில் 80-120 மி.கி. காஃபின் உள்ளது. இன்ஸ்டன்ட் காபியில் 50-65 மி.கி. மற்றும் தேநீரில் 30-65 மி.கி. காஃபின் உள்ளது.

ஒரு நாளுக்கு 300 மி.கி காஃபினுக்கு மேல் உட்கொள்வது உடல்நலத்துக்கு நல்லது இல்லை. அதே போல உணவு உட்கொள்வதற்கு ஒரு மணி நேரம் முன்னும், பின்னும் டீ,காபி அருந்துவதை தவிர்க்க வேண்டும்.

உணவில் இருந்து உடலுக்குச் செல்லும் இரும்புச் சத்துக்கள் டீ, காபி போன்ற பானங்களால் தடைப்படக்கூடும். இதனால் அனீமியா, ரத்தசோகை போன்ற உடல் நலக்குறைபாடு ஏற்படலாம். அதிகளவில் காபி குடிப்பது ரத்த அழுத்தத்தை அதிகரிக்கலாம்.

இதையடுத்து, பால் இல்லாமல் தேநீர் அருந்துவதால் ரத்த ஓட்டம் சீராகிறது. மேலும், வயிற்று புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைகிறது. தேநீர் மற்றும் காபி குடிப்பதை கட்டுப்படுத்தி பழங்கள், காய்கறிகள், தானியங்கள், இறைச்சிகள் மற்றும் கடல் உணவுகளை சாப்பிடலாம்” இவ்வாறு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிவுறுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.