ஆர்டிஐ மூலம் அம்பலம்
3 ஆண்டுகள் ஆகியும் சென்னை மெட்ரோ ரயில் பணிகளுக்கு நிதி வழங்காத ஒன்றிய அரசு, மற்ற 3 நகரங்களுக்கு நிதி வழங்கியது ஆர்டிஐ மூலம் அம்பலம்
சென்னை மெட்ரோ ரயில் திட்ட 2ம் கட்ட பணிகளுக்கு 3 ஆண்டுகளை கடந்தும் நிதி வழங்காத ஒன்றிய அரசு, அதே திட்டத்தோடு அறிவிக்கப்பட்ட மற்ற 3 திட்டங்களுக்கு நிதி வழங்கியது தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் அம்பலம் ஆகி உள்ளது. 118.9 கிமீ தூரம் கொண்ட சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட பணிகளுக்கு ரூ.63,246 கோடி நிதி ஒதுக்கப்படும் என்று ஒன்றிய அரசின் 2021-2022 நிதி நிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது. அத்துடன், பெங்களூரு, கொச்சி, நாக்பூர், நாசிக் ஆகிய நகரங்களில் நடைபெறும் 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டங்களுக்கும் நிதி ஒதுக்கப்படும் என்று 2021-22 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. 3 ஆண்டுகளைக் கடந்தும் சென்னை மெட்ரோ ரயில் பணிகளுக்கு ஒன்றிய அரசு நிதி வழங்காத நிலையில், மாநில அரசின் நிதியை கொண்டு பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் சென்னையை தவிர மற்ற 3 நகரங்களில் நடைபெறும் மெட்ரோ ரயில் திட்ட பணிகளுக்கு ஒன்றிய அரசு நிதி வழங்கியது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் அம்பலமாகி உள்ளது. 2021-2022 நிதிநிலை அறிக்கையில் 5 மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு நிதி அறிவிக்கப்பட்ட நிலையில், 2021ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் பெங்களூரு மெட்ரோ ரயில் பணிகளுக்கு ஒன்றிய அரசு ரூ.14,788 கோடி நிதியை விடுவித்துள்ளது. இதே போல கொச்சி மெட்ரோ ரயில் பணிகளுக்கு 2022ம் ஆண்டு நவம்பர் மாதத்திலும் நாக்பூர் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு 2022ம் ஆண்டு டிசம்பர் மாதத்திலும் ஒன்றிய அரசு நிதி வழங்கி உள்ளது. சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட பணிகளுக்கு மட்டும் 3 ஆண்டுகளை கடந்தும் ஒன்றிய அரசு நிதி வழங்காமல் இழுத்தடிப்பதால் மாநில அரசுக்கு நிதி சுமை அதிகரித்துள்ளதாக அரசியல் கட்சி தலைவர்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.