அனுப்பி விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி. முடிவு
ரூ.4 கோடி பறிமுதல் வழக்கு: பா.ஜ.க. நிர்வாகி கோவர்த்தனின் டிரைவர் விக்னேஷுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி. முடிவு
ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் பா.ஜ.க. நிர்வாகி கோவர்த்தனின் டிரைவர் விக்னேஷுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி. முடிவு செய்துள்ளது. தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த மார்ச் மாதம் 16ம் தேதி ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. பாஜக நெல்லை வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமானது என கூறப்படும் இந்த பணம் தொடர்பாக சிபிசிஐடிக்கு வழக்கு மாற்றம் செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக நயினார் நாகேந்திரனின் ஓட்டல் ஊழியர்களான சதீஷ் அவரது சகோதரர் நவீன், ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்த டிரைவர் பெருமாள், நயினார் நாகேந்திரனின் உறவினர் முருகனின் பணியாளர்கள் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோரிடம் சென்னை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
அவர்களை விசாரிக்கையில் கிடைத்த பதிவுகளின் அடிப்படையில் பாஜகவின் தொழில் மாநிலத்தலைவராக உள்ள கோவர்த்தனின் வீடு, சென்னை பெசண்ட்நகரில் உள்ள அவரது கொரியன் ஓட்டல் ஆகிய இடங்களில் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். 6 மணிநேரம் நடைபெற்ற சோதனையில் பணம் ஓட்டலில் இருந்து கொண்டு செல்லப்பட்ட பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. பணமானது ஓட்டலில் இருந்து கீழ்பாக்கம் பகுதியில் உள்ள நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான ஓட்டலுக்கு கொண்டு செல்லப்பட்டது என விசாரணையில் தெரியவந்தது.