நாய் வளர்த்தால் ரூ.1000 அபராதம்
சென்னையில் உரிமம் இல்லாமல் நாய் வளர்த்தால் ரூ.1000 அபராதம்: மாநகராட்சி எச்சரிக்கை
சென்னையில் கடந்த சில நாட்களாக தெருநாய்கள் மற்றும் வீட்டில் வளர்க்கப்படும் நாய்கள் பொதுமக்களை கடித்து காயப்படுத்தும் சம்பவங்கள் ஆங்காங்கே அரங்கேறி வருகின்றன. ஆயிரம் விளக்கு பகுதி பூங்காவில் விளையாடிய சிறுமியை ராட்வீலர் வகையை சேர்ந்த 2 வளர்ப்பு நாய்கள் கடித்துக் குதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் வளர்ப்பு நாய்கள் சாலையில் செல்பவர்களை கடித்தால் அதன் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது. மேலும், நாய்களை வீடுகளில் வளர்ப்பவர்கள் அதற்கான உரிய விதிமுறைகளை முறையாக கடைப்பிடிக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். சென்னையில் வீடுகளில் நாய்களை வளர்ப்பவர்கள் மாநகராட்சி அலுவலகம் மூலம் விண்ணப்பித்து உரிய உரிமத்தை பெற வேண்டும்.
இல்லையென்றால் அவர்களுக்கு ரூ.1000 அபராதம் விதிக்க சட்டத்தில் இடம் உள்ளது. இதனை முழுமையாக அமலாக்க மாநகராட்சி அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இதுகுறித்து, சென்னை மாநகராட்சி அதிகாரி கூறுகையில், ‘‘சென்னையில் நாய்களை வளர்க்கும் அனைவரும் உரிய உரிமம் பெற வேண்டும். இல்லையென்றால் ரூ.1000 அபராதம் விதிக்கப்படும். நாய் வளர்ப்பவர்களில் பெரும்பாலானவர்கள் உரிய உரிமத்தை பெறுவதில்லை. கடந்த ஆண்டு 1500 பேர் மட்டுமே உரிமம் பெற்றுள்ளனர். இந்த ஆண்டு இதுவரை 300 பேர் மட்டுமே உரிமம் கேட்டு முதலில் விண்ணப்பித்து இருந்தனர். நுங்கம்பாக்கத்தில் சிறுமியை நாய் கடித்த சம்பவத்துக்கு பிறகு மூன்றே நாட்களில் 1000 பேர் விண்ணப்பித்துள்ளனர்’’ என்றார்.