அஸ்வகந்தா
அறிமுகம்
அஸ்வகந்தா மிகவும் குறுகிய காலத்தில் வளரும் மருந்து செடி. வறண்ட நிலங்களில் நன்றாக வளரும். மேலும் வறண்ட தரிசு நிலங்களிலும் வளரும். ஆனால் களிமண்ணில் நன்றாக வளராது. இதற்கு ஒரு வாரத்திற்கு ஒருமுறை நீர்பாய்ச்சினாலே போதும். அஸ்வகந்தாவின் வேர்கள் மருத்துவ குணம் கொண்டது.
இவை தோல் நோய்கள், வயிற்றுப்புண் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும். ஆண்களுக்கு வீரியத்தன்மையை அதிகரிக்கவும், பெண்களின் மாதவிடாய் கோளாறுகளை சரிசெய்யவும் மருந்தாகப் பயன்படுகிறது. நடவு செய்த 5 முதல் 6 மாதத்திற்குள் இதன் வேர்கள் அறுவடை செய்யப்படுகிறது.
இது இந்தியாவில் பயிர் செய்யப்படும் ஒரு முக்கியமான மருந்து பயிர். அஸ்வகந்தி என்று கன்னடத்திலும், அஸ்வகந்த் என்று ஹிந்தியிலும், வின்டர் செர்ரி என ஆங்கிலத்திலும் இதனை அழைக்கிறார்கள். வேதகாலத்திலேயே இதன் முக்கியத்துவம் பற்றி கூறப்பட்டுள்ளது. வித்தானின் மற்றும் சோமினிபெரின் என்ற இரண்டு வேதிப்பொருட்களே இதன் மருத்துவ தன்மைக்கு காரணம்.
இவை அதிகமாக வேர்ப்பகுதிகளில் இருந்து பெறப்படுகின்றன. மேலும் இதன் இலைகள் 5 வகையான வேதிப்பொருட்களை கொண்டுள்ளது. மேலும் இதன் தண்டு பகுதியில் டேனின் மற்றும் பிளேவனாய்ட்ஸ் அதிகம் உள்ளது.
இதன் மருத்துவ குணத்திற்கு, பல்வேறு வேதிக்கூட்டுப்பொருட்களே காரணம். இந்தியாவில் விளையும் இரகம் 0.13 முதல் 0.31 சதவீதம் வரை வேதிக்கூட்டுப் பொருட்களை கொண்டுள்ளது. ஆனால், ஆப்பிரிக்கா இரகத்தின் வேர்களில் சிறிதளவு இளம் பழுப்புநிற, எளிதில் ஆவியாகக் கூடிய நறுமண எண்ணெய் இருக்கிறது. பழங்களில் அதிக புரத சத்து உள்ளது.
வித்தானின் – ஏ என்பது நோய் எதிர்ப்பு காரணியாகவும் மற்றும் கட்டிகளைக் குணப்படுத்தவும் பயன் படுகிறது. இலையினால் செய்யப்பட்ட பசையானது கட்டிகளையும், சருமநோய்களையும் குணப்படுத்த பயன்படுகிறது. ராஜஸ்தானில், முடக்குவாதத்திற்கு மருந்தாக இதனை பயன்படுத்துகிறார்கள். பஞ்சாபில், குடல் புண்ணை குணமாக்க பயன்படுத்துகிறார்கள்.
இலையில் இருந்து பெறப்படும் கசாயம், குழந்தைகளுக்கு ஜீரணத்தை போக்கவும், உடல் வீக்கத்தைப் போக்கவும் குடிப்பவர்களை குழப்பழக்கத்தில் இருந்து விடுவிக்கவும் பயன்படுகிறது. பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைபடுதல், மாதவிடாய் கோளாறு, மலட்டுத்தன்மை கருப்பைப்புண் ஆகியவைகளை குணப்படுத்த பயன்படுகிறது. இதன் வேர்களில் இருந்து பெறப்படும் பவுடர், பாம்பின் விசத்தை முறிக்கக்கூடிய வல்லமை கொண்டது. இதன் வேர் கசாயம், கருப்பை புண்ணை போக்கக்கூடியது.
இதன் வேர் கசாயத்துடன், மிளகு, திப்பிலி, வெண்ணெய் மற்றும் தேன் (25 – 50கி.) அல்லது இதன் வேர் பவுடர் உடன் பால் சேர்த்து பருகினால் ஆண்களுக்கு வீரியத்தன்மை அதிகரிக்கும்.
இதன் இலைதழைகளில் இருந்து தயாரிக்கப்படும் பசையானது குதிரைகளில் ஏற்படும் புண்களையும், கட்டிகளையும் குணப்படுத்த உதவுகின்றது.