அதிக மகசூல், அதிக சர்க்கரை கட்டுமானம் தரக்கூடிய கோ 11015, கோ 6, கோ கு 7, கோ க 13339, கோ 0212, கோ.உ. 09356 புதுப்பிக்கப்பட்ட கோ 86032 போன்ற இரகங்களை கரும்பு விவசாயிகளிடையே பிரபலப்படுத்தும் திட்டத்தினை நடப்பாண்டில் ரூ. 12.34 கோடி நிதியில் செயல்படுத்த அரசு ஒப்புதல் அளித்து, முதல் தவணையாக, மூன்று கோடி ரூபாய் விடுவித்து அரசாணை வெளியிட்டுள்ளது.
திட்ட விவரம்
வல்லுநர் விதைக்கரும்பு கொள்முதலுக்கு மானியம்
கோயம்புத்தூரில் உள்ள கரும்பு இனப்பெருக்க நிறுவனம் மற்றும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக ஆராய்ச்சி நிலையங்களிலிருந்து புதுப்பிக்கப்பட்ட கோ 86032, கோ 0212, கோ 11015, கோ உ 09356, கோ க 13339, கோ கு 6, கோ கு 7 இரகங்களில் வல்லுநர் விதைக்கரும்பு வாங்கிட டன்னுக்கு ரூ. 2500 வீதம் எக்டருக்கு 5 டன் வாங்குவதற்கு ரூ. 12500 வழங்கப்படும்.
திசு வளர்ப்பு நாற்றுக்கள் கொள்முதலுக்கு மானியம்
கோ 86032, கோ 11015 இரகங்களில் திசு வளர்ப்பு நாற்றுகளை மேற்காணும் ஆராய்ச்சி நிலையங்கள் மற்றும் கள்ளக்குறிச்சி 1 கூட்டுறவு சர்க்கரை ஆலையில் வாங்கிட நாற்றுக்கு ரூ. 6 வீதம் எக்டருக்கு 15000 திசு வளர்ப்பு நாற்றுக்கள் வாங்கிட ரூ. 90000 மானியமாக வழங்கப்படும்.
மேற்கண்ட இரண்டு இனங்களிலும் கரும்பு விவசாயிகளுக்குத் தரமான வீரியமிக்க இனத்தூய்மையுள்ள விதைக் கரும்புகளை வழங்கும் நோக்குடன் வல்லுநர் விதைக்கரும்பு மற்றும் திசு வளர்ப்பு நாற்றுகள் மூன்றடுக்கு நாற்றங்கால் திட்டத்தில் நடவு செய்யும் கரும்பு விவசாயிகளுக்கு மட்டுமே வழங்கப்படும்.
பரு சீவல் நாற்றுக்கள் கொள்முதல் செய்திட மானியம்
கோ 86032, கோ 11015, கோ உ 09356, கோ க 13339, கோ கு 6, கோ கு 7 இரகங்களின் பரு சீவல் நாற்றுக்கள் வாங்கிட ஒரு எக்டருக்கு ரூ. 12500 மானியமாக வழங்கப்படும்.
ஒற்றைப் பரு விதை கரணைகள் கொள்முதல் செய்திட மானியம்
விதைக் கரணைகளுக்கு ஆகும் செலவினைக் குறைப்பதற்காக கோ 86032, கோ 11015, கோ உ 09356, கோ 0212, கோ க 13339, கோ கு 6, கோ கு 7 ஆகிய கரும்பு இரகங்களின் ஒற்றைப்பரு விதைக் கரணைகளைக் கொண்டு நடவு செய்யும் விவசாயிகளுக்கு எக்டருக்கு 2. 5 டன் வாங்கிட ரூ. 3750 மானியமாக வழங்கப்படும்.
விதைக் கரும்பின் அளவைக் குறைத்து சாகுபடி செலவினை குறைப்பதற்கும் உயர் மகசூல் இரக சாகுபடி கரும்பில் இயந்திரமாக்கல் முறையினை ஊக்குவிக்கும் பரு சீவல் நாற்றுக்களுக்கும், ஒரு பரு விதைக் கரணைக்கும் மானியம் வழங்கப்படுகிறது.
