10 ஆண்டு ஆட்சியில் பாஜவுக்கு மிகவும் பின்னடைவு: வாலாஜாவில் திருமாவளவன் பேட்டி
10 ஆண்டு ஆட்சியில் பாஜவுக்கு மிகவும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக வாலாஜாவில் திருமாவளவன் கூறினார்.ஆந்திர மாநிலத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து சித்தூர் பகுதியில் நடைபெறும் தேர்தல் பிரசாரத்தில் கலந்து கொள்வதற்காக விசிக தலைவர் திருமாவளவன் நேற்று சென்னையில் இருந்து காரில் வந்தார். ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா சுங்கச்சாவடி அருகே அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் திருமாவளவன் நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் கடந்த 3 ஆண்டுகால திமுக ஆட்சியின் சாதனைகள் கூட்டணியின் வெற்றிக்கு அச்சாணியாக அமைந்திருப்பதை தேர்தல் முடிவுகள் தெரிவிக்கும். அதேபோல் தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதுமே இந்தியா கூட்டணி கட்சியினருக்கு மிகுந்த வரவேற்பு பொதுமக்கள் மத்தியில் உள்ளது. இந்தியா கூட்டணி ஆட்சி மலரும். கடந்த 10 ஆண்டு ஆட்சியில் பாஜகவுக்கு மிகவும் பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது. அதிலும் 3வது முறையாக பிரதமர் வேட்பாளராக மோடி அறிவிக்கப்பட்டு இருப்பதே இந்தியா கூட்டணி கட்சியின் வெற்றிக்கு ஆதாரமாகும்.