கொட்டி தீர்த்த கோடை மழை
தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் கொட்டி தீர்த்த கோடை மழை: வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் மக்கள் சற்று நிம்மதி
சென்னையில் இன்று அதிகாலையில் சில இடங்களில் திடீரென பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்ந்தனர். இதனால் சற்று வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் அதன் கோரமுகத்தை காட்டிக் கொண்டிருக்கிறது. கடந்த ஏப்ரல் மாதம் முதலே பெரும்பாலான இடங்களில் தினசரி 100 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்தியதால் மக்கள் பெரும் அவதிப்பட்டனர். இதனிடையே தற்போது கத்திரி வெயில் காலமும் தொடங்கி விட்டதால் பகல் நேரங்களில் வீட்டை விட்டு மக்கள் வெளியே வருவதே இல்லை.
கோடை மழை வருமா அல்லது வெயிலின் தாக்கம் தணியுமா என தினசரி எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் நிலவுவதால் மக்கள் சற்று நிம்மதியடைந்தனர். ஆனால் தலைநகர் சென்னையில் மழைக்கான அறிகுறியே இல்லாமல் இருந்தது. ஆனால் இரவு நேரத்தில் குளிர்ந்த காற்று வழக்கதை விட அதிகமாக வீசி வந்தது. இந்நிலையில் சென்னையில் இன்று அதிகாலையில் 4.30 மணி அளவில் திடீரென மழை பெய்தது. இது தூங்கிக் கொண்டிருந்த அனைவருக்கும் இன்ப அதிர்ச்சியை கொடுத்தது. சென்னையில் சைதாப்பேட்டை, கிண்டி, ஆலந்தூர்,மீனம்பாக்கம் விமான நிலையம், அடையார், வேளச்சேரி, ஈக்காட்டுத்தாங்கல், அசோக் நகர், வடபழனி, தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், ஆயிரம் விளக்கு, நந்தனம் ஆகிய சென்னையின் உள் இடங்களில் நல்ல மழை பெய்தது.