விராலிமலை சந்தையில் ₹1.50 கோடிக்கு ஆடுகள் விற்பனை

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் வாரந்தோறும் திங்கட்கிழமை நடைபெறும் ஆட்டு சந்தை பிரபலமானது. அதிகாலை தொடங்கும் இந்த ஆட்டு சந்தையில், பல்வேறு மாவட்டங்களிலிருந்து வியாபாரிகள் முதல்நாள் இரவே லோடு வாகனங்களில் விராலிமலைக்கு வந்து தங்கி இருந்து ஆடுகளை வாங்கி செல்வது வழக்கம். சித்திரை மாதத்தில்தான் பெரும்பாலான கோயில் திருவிழாக்கள், காதுகுத்து உள்ளிட்ட சுப விழாக்கள் நடைபெறும்.

இந்த மாதத்தில் கிராம கோயில்களில் பெரும்பாலும் ஆடு, கோழி பலியிட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன் நிறைவேற்றுவார்கள். இதனால், இந்த மாதத்தில் ஆடு, கோழி விற்பனை சந்தைகளில் களை கட்டும். அதோடு ஆடுகளை வளர்த்து வரும் விவசாயிகளுக்கு விற்பனையின் போது நல்ல லாபம் கிடைக்கும். இந்நிலையில் திங்கட்கிழமையான நேற்று விராலிமலை ஆட்டுசந்தை வழக்கம்போல் கூடியது. ஆடுகள் விற்பனை அமோகமாக நடந்தது. திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர் சுற்று வட்டார கிராமங்கள் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்தும் ஆயிரத்துக்கும் அதிகமான ஆடுகளுடன் விவசாயிகள், வியாபாரிகள் மற்றும் கோயில்களில் நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள், விவசாயிகள் அதிகாலையிலே சந்தையில் குவிந்தனர்.

Leave a Reply

Your email address will not be published.