நீட் வினாத்தாள் கசிந்ததா? – தேசிய தேர்வு முகமை விளக்கம்
நாடு முழுவதும் நேற்று நடைபெற்ற நீட் தேர்வின்போது ராஜஸ்தானில் வினாத்தாள் கசிந்ததாக பரப்பப்படும் தகவலில் உண்மையில்லை என்று தேசிய தேர்வுகள் முகமை விளக்கம் அளித்துள்ளது.
நீட் தேர்வு முடிவதற்கு முன்பே, வலுக்கட்டாயமாக தேர்வறைகளிலிருந்து வெளியேறிய மாணவர்களால் வினாத்தாள் கசிந்ததாகவும், வினாத்தாள் 4 மணிக்குத்தான் கசிந்ததாகவும், அதற்கு முன்பே தேர்வுகள் தொடங்கிவிட்டதாகவும் தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.
நீட் வினாத்தான் கசிந்ததாக சமூக வலைத்தளங்களில் ஏராளமான புகார்கள் எழுந்துள்ளன.
ராஜஸ்தான் மாநிலத்தில் அமைக்கப்பட்ட ஒரு பெண்கள் மேல்நிலைப் பள்ளி தேர்வுக் கூடத்தில், ஹிந்தியில் தேர்வெழுத வந்த மாணவர்களுக்கு ஆங்கில வினாத்தாள் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதனை உடனடியாக மாற்றிக்கொடுக்க தேர்வுக் கண்காணிப்பாளர்கள் முன்வந்தனர். ஆனால், அந்த மாணவர்கள் திடீரென வினாத்தாள்களுடன் தேர்வறையிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேறியுள்ளனர் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், தேர்வு முடிந்தபிறகுதான் மாணவர்கள் தேர்வறையிலிருந்து வெளியேற வேண்டும் என்பது விதிமுறை. ஆனால், வலுக்கட்டாயமாக வெளியேறிய மாணவர்களால் மாலை 4 மணியளவில் சமூக வலைத்தளங்களில் நீட் வினாத்தாள் கசிந்துள்ளது. ஆனால், அதற்குள் அனைத்து நீட் தேர்வு மையங்களிலும் தேர்வுகள் தொடங்கிவிட்டிருந்தன. எனவே, நீட் வினாத்தாள் தேர்வுக்கு முன்பே கசிந்ததாக பரப்பப்படும் தகவலில் உண்மையில்லை என்று தேசிய தேர்வு முகமை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.