சபரிமலையில் ‘ஸ்பாட் புக்கிங்’ வசதி ரத்து
சபரிமலையில் ‘ஸ்பாட் புக்கிங்’ வசதி ரத்து: தேவசம்போர்டு, கேரள அரசு கூட்டு முடிவு.
சபரிமலை மண்ட, மகர விளக்கு சீசனில் கடந்த ஆண்டு போல நெரிசல் ஏற்பட்டு பக்தர்கள் சிரமப்படாமல் இருப்பதற்காக, ‘ஸ்பாட் புக்கிங்’ ரத்து செய்யப்படுகிறது. தினம், 80,000 பேருக்கு மட்டும் அனுமதி வழங்க கேரள அரசும், தேவசம் போர்டும் முடிவு செய்துள்ளன.
கடந்த ஆண்டு மண்டல, மகர விளக்கு சீசனில் கட்டுக்கடங்காத கூட்டம் ஏற்பட்டு, 24 மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. காடுகளிலும், மலைகளிலும் சிக்கிய பக்தர்கள் தண்ணீர் கூட கிடைக்காமல் சிரமப்பட்டதால் ஏராளமான பக்தர்கள் தரிசனம் முடிக்காமல் இருமுடி கட்டுகளை காட்டுகளுக்குள்ளே விட்டு திரும்பினர்.
சபரிமலையில், 14 ஆண்டுகளுக்கு முன், ‘விருச்சுவல் கியூ’ என்ற ஆன்லைன் முன்பதிவு ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் துவக்கப்பட்டது. கொரோனாவுக்கு பின் முழுமையாக அனைத்து பக்தர்களும் ஆன்லைன் முன்பதிவு வாயிலாக வர வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது.
ஆன்லைனில் முன்பதிவு செய்ய முடியாத பக்தர்களுக்காக நிலக்கல், பம்பை, எருமேலி மற்றும் கேரளாவின் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஸ்பாட் புக்கிங் வசதி செய்யப்பட்டது. ஏற்கனவே, 80,000 பக்தர்கள் முன்பதிவு வாயிலாக தினமும் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஸ்பாட் புக்கிங் வாயிலாகவும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்ததால் பெரும் சிக்கலானது.
தொடர்ந்து, நவம்பர் மாதம் துவங்க உள்ள மண்டல, மகர விளக்கு கால சீசனில் ஸ்பாட் புக்கிங் வசதியை முழுமையாக ரத்து செய்ய திருவிதாங்கூர் தேவசம் போர்டும், கேரள அரசும் முடிவு செய்துள்ளன.
தினசரி முன்பதிவு, 80,000 ஆக தொடரவும், சீசனுக்கு மூன்று மாதங்களுக்கு முன்பே ஆன்லைன் முன்பதிவை துவங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. திருவிதாங்கூர் தேவசம் போர்டு கூட்டத்தில் இதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டதாக அதன் தலைவர் பிரசாந்த் கூறினார்.