30 ஆண்டுகள் பயன்பாட்டில் இருந்த பொது பாதை அடைப்பு
30 ஆண்டுகள் பயன்பாட்டில் இருந்த பொது பாதை அடைப்பு: நடவடிக்கை எடுக்க கோரிக்கை
மணலி மண்டலம், 15வது வார்டுக்கு உட்பட்ட மணலி புதுநகர் அருகே ஈச்சங்குழி என்ற பகுதி உள்ளது. இங்கு சுமார் 30 குடும்பங்கள், 30 ஆண்டுகளுக்கும் மேலாக வீடுகளைக் கட்டி வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் தங்கள் போக்குவரத்திற்காக ஒரு பாதையை பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த சிலர், இந்த பாதை கோயிலுக்குச் சொந்தமான இடம், இதனை பொதுமக்கள் பயன்படுத்தக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனையடுத்து அந்த பாதை யாருக்குச் சொந்தமான இடம் என்பதை அடையாளம் கண்டு சான்றிதழை அளிக்க வேண்டும் என மாநகராட்சி உதவி பொறியாளர் சோமசுந்தரம், சில நாட்களுக்கு முன்பு திருவொற்றியூர் தாசில்தாருக்கு கடிதம் அனுப்பினார். ஆனால் பல நாட்களாகியும் அந்த பணி மேற்கொள்ளப்படவில்லை.
இதனால் இந்த பிரச்னை தொடர்ந்து கொண்டே இருந்தது. இந்தநிலையில் இரு தினங்களுக்கு முன்பு ெபாதுமக்கள் பயன்படுத்தி வந்த பாதையில் முள்வேலியை அமைத்து பாதையை மறிக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் பயன்படுத்தி வந்த குடிநீர் வழங்கல் வாரிய பொது குழாயையும் அடைத்துவிட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த வார்டு கவுன்சிலர் நந்தினி சண்முகம், மணலிபுது நகர் போலீசார் மற்றும் குடிநீர் வழங்கல் வாரிய அதிகாரிகள் ஆகியோர் கொண்ட குழுவினர் பிரச்னைக்குரிய ஈச்சங்குழி பகுதிக்குச் சென்றனர். பல ஆண்டுகளாக பயன்படுத்தி பாதையையும், அரசாங்கத்தால் போடப்பட்ட குழாயையும் திடீரென்று அடைக்கக்கூடாது என்றும் கூறி அந்த முள்வேலியை அப்புறப்படுத்தியதோடு, குடிநீர் குழாயையும் திறந்து விட்டனர்.
ஆனாலும் இதற்கு எதிர் தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். எனவே மாவட்ட வருவாய்த் துறை தலையிட்டு இப்பிரச்னையை தீர்த்து வைக்க வேண்டும் என்று அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.