யானை தந்தம் விற்க முயன்ற 2 பேர் கைது
கோவை வடவள்ளி பகுதியில் சட்டவிரோதமாக யானை தந்தம் விற்க முயற்சி நடந்து வருவதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து வனச்சரக அலுவலர் தலைமையில் வனச்சரக பணியாளர்கள் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அப்போது, சாய்பாபாகாலனியை சேர்ந்த விசாகன் (40), நல்லாம்பாளையம் பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் (40), வடவள்ளியை சேர்ந்த பிரிட்டோ (43) மற்றும் செல்வராஜ் (38) ஆகிய 4 பேர் யானை தந்தம் விற்பனை செய்ய முயற்சி செய்தது தெரியவந்தது. இதையடுத்து, பிரிட்டோ மற்றும் செல்வராஜ் ஆகிய இருவரை கைது செய்த வனத்துறையினர், விசாகன் வீட்டில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த யானை தந்தம் ஒன்றை பறிமுதல் செய்தனர். தலைமறைவாக உள்ள கார்த்திகேயன் மற்றும் விசாகனை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.