கட்சியின் வருவாய் வெறும் ரூ.14,660 கோடி மட்டுமே
தேர்தல்கள், கட்சி அலுவலகம் கட்ட கடந்த 10 ஆண்டில் பாஜ ரூ.1 லட்சம் கோடி செலவு: கட்சியின் வருவாய் வெறும் ரூ.14,660 கோடி மட்டுமே
ஒன்றிய ஆளும் பாஜ கட்சியின் வருவாய் மற்றும் செலவுகள் குறித்து ஆங்கில இணையதள செய்தி நிறுவனம் கட்டுரை ஒன்று வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த 2014ல் ஒன்றியத்தில் பாஜ ஆட்சி அமைந்த பிறகு, ஆகஸ்ட் மாதம் பிரதமர் மோடி அனைத்து மாநிலம் மற்றும் மாவட்டங்களில் நவீன வசதிகளுடன் கட்சி அலுவலங்கள் இருக்க வேண்டும் என உத்தரவிட்டார். அடுத்த ஆண்டே, 635 மாவட்டங்களில் புதிய அலுவலகங்களைக் கட்ட பாஜ முடிவு செய்தது.
இந்த இலக்கு மார்ச் 2023க்குள் 887 மாவட்ட கட்சி அலுவலகங்களாக உயர்த்தப்பட்டது. கடந்த 2023 மார்ச் மாதம் தமிழ்நாட்டில் புதிதாக 10 பாஜ கட்சி அலுவலகங்களை வீடியோ கான்பரன்ஸ் மூலம் திறந்து வைத்த அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, 290 மாவட்ட அலுவலகங்கள் கட்டி முடிக்கப்பட்டிருப்பதாகவும், மீதமுள்ளவை கட்டப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். இதில் பாஜ கட்டியிருப்பவை எதுவும் சாதாரண அலுவலகங்கள் அல்ல.
கடந்த 2018ல் டெல்லியில் தீன தயாள் உபாத்யாய் மார்க் பகுதியில் 1.70 லட்சம் சதுர அடியில் பாஜ தலைமையகம் கட்டப்பட்டது. இந்த இடம் டெல்லியின் வர்த்தக மையமான கன்னாட் பிளேசில் இருந்து ஒரு கி.மீக்கும் குறைவான தூரத்தில் உள்ளது. இதை திறந்து வைத்த ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறுகையில், ‘உலகிலேயே மிகப்பெரிய கட்சி அலுவலகம் இது’’ என பெருமிதத்துடன் கூறினார். ஏற்கனவே 11, அசோகா சாலையில் உள்ள பழைய கட்சி அலுவலகத்தை பாஜவின் ஐடி அலுவலகமாகவும், தேர்தல் வார் ரூமாகவும் மாற்றப்பட்டது.
2021ல் குர்கான் பாஜ அலுவலகம் 1 லட்சம் சதுர அடியில் கட்டப்பட்டது. 2023 டெல்லி பாஜ அலுவலகம் கோயில் கட்டமைப்பில் 30,000 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டது. போபாலில் மபி பாஜ அலுவலகம் ரூ.100 கோடியில் கட்டப்பட்டது. அசாம் பாஜ அலுவலகம் ரூ.25 கோடியில் கட்டப்பட்டது. பாஜவின் தலைமையகம் கட்டுவதற்கு மட்டுமே ரூ.700 கோடி செலவிடப்பட்டிருப்பதாக காங்கிரஸ் தலைவர் கமல்நாத் கூறி உள்ளார். ஆனால், தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் பாஜ கடந்த 10 ஆண்டில் புதிய கட்டிடத்திற்கு செய்திருப்பதாக கூறியிருக்கும் அதிகாரப்பூர்வ செலவு ரூ.1,124 கோடி மட்டுமே.
நட்டா கூறிய படி, 290 கட்சி அலுவலகங்களை பாஜ கட்டி முடித்திருப்பதாக வைத்துக் கொண்டால், தோராயமாக ஒரு மாவட்ட அலுவலகம் கட்ட ரூ.3 கோடி என்றாலும் ரூ.870 கோடி செலவிட்டிருப்பார்கள். 887 மாவட்ட அலுவலகங்கள் கட்ட ரூ.2,661 கோடி செலவாகும். ஒவ்வொரு மாநிலத்திலும் தலைநகருக்கு ஒரு பெரிய அலுவலகம் கட்ட குறைந்தபட்சம் ரூ.25 கோடி என வைத்துக் கொண்டால் அதற்கு ரூ.900 கோடி செலவாகும். அப்படி என்றால், கட்சி அலுவலகம் கட்டுவதற்கே பாஜ ரூ.3,500 கோடிக்கு மேல் செலவிட தயாராக உள்ளது.