அளவு மீற வேண்டாமென மருத்துவர்கள் எச்சரிக்கை

சதம் அடிக்கும் வெயிலையும் சமாளிக்கலாமாம்… மதுபிரியர்கள் நாடும் குளுகுளு பீர் வகைகள்: இயல்பை விட 40 சதவீதம் வரை விற்பனை அதிகரிப்பு; அளவு மீற வேண்டாமென மருத்துவர்கள் எச்சரிக்கை

தமிழகத்தில் முன் எப்போதும் இல்லாத வகையில் இந்த முறை மார்ச் மாதம் முதலே கடும் கோடை வெயில் சுட்டெரிக்க தொடங்கி விட்டது. இது படிப்படியாக அதிகரித்து 22க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் வெயில் தினமும் சதம் அடித்து வருகிறது. குறிப்பாக, காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை சுட்டெரிக்கும் வெயிலை சமாளிக்க முடியாமல் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். கோடை வெயிலில் இருந்து தங்களை காத்துக்கொள்ள பொதுமக்கள் பல்வேறு யுத்திகளை கையாண்டு வருகின்றனர்.

சென்னையில் வரலாறு காணாத அளவு மழை பெய்தபோது கூட சாலையின் நடுவே சுவர்களில் வைத்து மது அருந்திய சென்னைவாசிகள் இந்த வெயிலை மட்டும் விட்டுவிடுவார்களா என்ன? எப்போதும் எந்த பிரச்னையாக இருந்தாலும் அதனை சற்று மாற்றி யோசிக்கும் மது பிரியர்கள், கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க பீர் வகைகளை அதிகம் விரும்பி அருந்த தொடங்கியுள்ளனர். இதன் காரணமாக, சராசரியை விட பீர்களின் விற்பனை 40 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. மது பிரியர்கள் விஸ்கி, பிராந்தி போன்ற மது வகைகளை விட கூலிங் பீர் வகைகளை அதிகம் குடிக்க தொடங்கியுள்ளனர். இதனால் டாஸ்மாக் கடைகளில் பீர் விற்பனை அதிகரித்துள்ளது.

இதுகுறித்து டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் பெரும்பாலானோர் பீர் வகைகளை கேட்டு வாங்குகின்றனர். இதனால் தட்டுப்பாடின்றி சூப்பர் ஸ்டிராங் பீர், பிரீமியம் பீர், லேகர் பீர் என பல்வேறு வகைகளில் பீர் வழங்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் சாதாரண நாட்களில் ஒரு லட்சம் பெட்டி கொண்ட பீர்பாட்டில்கள் விற்பனையாகும். ஆனால் இப்போது ஒரு லட்சத்து 40 ஆயிரம் பெட்டிகள் வரை விற்பனை ஆகிறது. 40 சதவீதம் வரை பீர் வகைகள் விற்பனை அதிகமாகியுள்ளதால் கூடுதலாக பீர் பாட்டில்கள் டாஸ்மாக் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. இது இம்மாதத்தில் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக மதுபான தொழிற்சாலைகளில் பீர் உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published.