நீலகிரியில் வறட்சியை எதிர்கொள்ள முடியாமல்

நீலகிரியில் வறட்சியை எதிர்கொள்ள முடியாமல் மாடுகள் உயிரிழப்பு: போர்க்கால அடிப்படையில் அரசு கால்நடைகளை பாதுகாக்க விவசாயிகள் கோரிக்கை

நீலகிரி மாவட்டம் மசினகுடி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் நிலவும் வறட்சியால் பசுந்தீவனங்களின்றி நாட்டு மாடுகள் அடுத்தடுத்து உயிரிழப்பது விவசாயிகளை வேதனை அடைய செய்துள்ளது. நீலகிரியில் வரலாறு காணாத வெயில் சுட்டெரிப்பதால் முதுமலை வனப்பகுதிகளில் கடும் வறட்சி நிலவுகிறது. குறிப்பாக மசினகுடி அதனை சுற்றியுள்ள மாவனல்லா, மாயார் உள்ளிட்ட இடங்களில் 5,000க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு தீவன தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதனால் தினசரி ஒவ்வொரு கிராமத்திலும் இரண்டு முதல் ஐந்து மாடுகள் வரை உயிரிழப்பதாகவும், ராகி, நெல் போன்ற பசுந்தீவனங்கள், புண்ணாக்கு போன்ற சத்துணவு கிடைக்காமல் பால் உற்பத்தி வெகுவாக குறைந்துள்ளதாகவும் கால்நடை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். தீவன தட்டுப்பாட்டை போக்க தஞ்சாவூர் போன்ற ஊர்களில் இருந்து வைக்கோல்களை அதிக விலைக்கு வாங்க வேண்டி இருப்பதாக கூறும் விவசாயிகள் அதீத வெப்பத்தை தாங்க முடியாமல் மாடுகள் படுத்தே கிடப்பதாக வேதனை தெரிவிக்கின்றனர்.

மேலும் மசினகுடியில் வறட்சி ஏற்படும் என்று மாவட்ட நிர்வாகத்திற்கு மூன்று மாதங்களுக்கு முன்பே எச்சரித்தும் ஆவின் நிர்வாகம் அதற்கான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றும் இதுவே அதிக எண்ணிக்கையில் நாட்டு மாடுகள் உயிரிழப்புக்கு காரணம் என்கின்றனர் விவசாயிகள். எனவே தமிழ்நாடு அரசு மசினகுடியில் உள்ள நாட்டுமாடு இனத்தை பாதுகாக்க அதிகளவில் பசுந்தீவனங்களை ஒதுக்கீடு செய்து கூடுதல் கால்நடை மருத்துவ துறையினரை பணியமர்த்த வேண்டும் என்றும் அவற்றை போர்க்கால அடிப்படையில் மோற்கொள்ள வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.