எடை குறைப்பு சிகிச்சையில் இளைஞர் உயிரிழந்த விவகாரம்
எடை குறைப்பு சிகிச்சையில் இளைஞர் உயிரிழந்த விவகாரம்: விசாரணை அறிக்கை இன்று தமிழக அரசிடம் சமர்பிப்பு
உடல் எடையை குறைப்பதற்காக சிகிச்சை மேற்கொண்ட புதுச்சேரி இளைஞர் ஹேமசந்திரன் உயிரிழந்தது தொடர்பாக மருத்துவ குழுவினர் மேற்கொண்ட விசாரணை அறிக்கை இன்று தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட உள்ளது. புதுச்சேரியை சேர்ந்த இளைஞர் ஹேமசந்திரன் உடல் பருமன் காரணமாக சென்னை பம்மலில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக உடல் பருமன் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழந்தது குறித்து விசாரணை நடத்த குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது. 2 இணை இயக்குனர்கள் கொண்ட குழுவை அமைத்த மருத்துவத்துறை, இளைஞர் உயிரிழப்பு குறித்து 2 நாட்களில் விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கவும் ஆணையிட்டு இருந்தது. அதன் அடிப்படையில் 2 இணை இயக்குனர்கள் தலைமையில் 4 மருத்துவர்கள் கொண்ட குழுவினர் அரசு மருத்துவ கல்லூரியில் சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனை மருத்துவர்களை நேரில் வரவழைத்து விசாரணையை தொடங்கினர்.
பொது மருத்துவ பிரிவு தலைவர், மயக்கவியல் குடல் அறுவை சிகிச்சை தலைவர், இதயவியல் மருத்துவர்கள் உள்ளிட்டோர் விசாரணையை நடத்தினர். விசாரணை நடத்தப்பட்ட பின் சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனைக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். இதுவரை 25 பேரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில், மருத்துவ குழுவினர் இன்று மாலை தமிழக அரசிடம் புதுச்சேரி இளைஞர் ஹேமச்சந்திரனுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை தொடர்பான விசாரணை அறிக்கையை மருத்துவ குழுவினர் சமர்ப்பிக்க உள்ளனர்.