தஞ்சாவூரில் வரத்து குறைவால் எலுமிச்சை, நெல்லிக்காய் விலை கடும் உயர்வு
தஞ்சாவூரில், வரத்து குறைவினால் எலுமிச்சைபழம், நார்த்தம் பழம், நெல்லிக்காய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் காமராஜர் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு 250க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. தஞ்சாவூர் மார்க்கெட்டிற்கு ஆந்திரா, கர்நாடகா, மத்திய பிரசேதம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும், தமிழகத்தில் கிருஷ்ணகிரி, ஓசூர், நீலகிரி, பெரம்பலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.மேலும் இங்கிருந்து பட்டுக்கோட்டை, திருவையாறு, ஒரத்தநாடு மற்றும் தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கும் காய்கறிகள் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படும்.கடந்த சில மாதங்களாகவே தக்காளியை தவிர அனைத்து காய்கறிகளின் விலையும் தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வருகிறது. அதிலும் குறிப்பாக தற்போது பீன்ஸ் விலை கிலோ ரூ.160 வரை விற்பனை செய்யப்படுகிறது. அதை தொடர்ந்து அவரைக்காய் விலை கடந்த வாரம் கிலோ ரூ.40 இருந்த நிலையில் தற்போது ரூ.86க்கு விற்பனை செய்யப்படுகிறது.