கி.வீரமணி மே தினவாழ்த்து
உலகெங்கும் உழைக்கும் வர்க்கத்தால் உன்னத உரிமைத் திருநாளாக உவகையுடன் கொண்டாடப்படும் திருநாள்!: கி.வீரமணி மே தினவாழ்த்து
உலகெங்கும் உழைக்கும் வர்க்கத்தால் உன்னத உரிமைத் திருநாளாக உவகையுடன் கொண்டாடப்படும் திருநாள்! என திராவிட கழக தலைவர் கி.வீரமணி மே தின வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது முகநூல் பக்கத்தில் கூறியதாவது, நாளை (மே முதல் நாள்) உலகெங்கும் உழைக்கும் வர்க்கத்தால் உன்னத உரிமைத் திருநாளாக உவகையுடன் கொண்டாடப்படும் திருநாள்! உலகத்தினரை வர்ணத்தாலும், வர்க்கத்தாலும் பிரித்து வைத்து பேதப்படுத்தி சுரண்டிக் கொழுத்த சுயநல சக்திகளுக்கு எதிராக சூளுரைத்துத் தொழிலாளி வர்க்கம் வெற்றி கண்ட திருநாள் – வரலாற்றுப் பொன்னேட்டில் மிளிரும் உரிமை நாள்!தந்தை பெரியாரும், திராவிடர் இயக்கமும் அடையாளம் காட்டிய அரிய திருநாள்!
‘‘காண்பதெல்லாம் தொழிலாளி செய்தான் அவர்
காணத் தகுந்தது வறுமையாம்
பூணத் தகுந்தது பொறுமையாம்‘’ என்று புரட்சிக்கவிஞர் கேட்டதோடு,
‘‘பொத்தல் இலைக்கலமானார் ஏழை மக்கள்
புனல் நிறைந்த தொட்டியார் செல்வர்’’
என்று கவிதையைச் சொடுக்கினார்!
இன்று அதானிகளும், அம்பானிகளும், டாட்டா, பிர்லாக்களும் ஆகிய கார்ப்பரேட் கனவான்களின் ஆட்சி, ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க., மோடி ஆட்சியாகி, விலைவாசி ஏற்றமும், வேலையில்லாக் கொடுமையும், சமூகநீதி வெறும் கானல் நீராகி வரும் நிலையை மாற்றிடும் வாய்ப்பாக, நடைபெறும் மோதலைக் கருவியாக்கி, அனைவருக்கும் அனைத்துமான சமதர்ம உலகினை சமைக்க ஒருங்கிணைந்து ஒன்று திரண்டு வென்று காட்டி, எதேச்சதிகார உயர்ஜாதி – உயர்வர்க்க காவி ஆட்சியை வீழ்த்திட, வீறுகொண்டு சூளுரைப்போம்! எமது மே தின வாழ்த்துகள்!இவ்வாறு வாழ்த்து தெரிவித்துள்ளார்.