20 ஆண்டுகளாக தினசரி உயிரைப் பணயம் வைத்து வாழும் பழங்குடிகள்

 மகாராஷ்டிராவின் நந்துர்பார் மாவட்டத்தில் உள்ள தொலைதூர கிராமம். உலகளவில் இந்தியா அடைந்துள்ள வளர்ச்சி இன்னும் இந்த கிராமத்தைச் சென்று சேரவில்லை. கடந்த 20 ஆண்டுகளாக தாட்காவ்ன் தாலுகாவில் உள்ள சாவ்ரிடிகர் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து ஆற்றைக் கடக்கின்றனர்.

இந்த கிராமத்திற்கு பிலகாவ்ன் ஆரம்ப சுகாதார நிலையம்தான் அருகில் உள்ளது. ஆனால், இந்த இரு கிராமங்களுக்கும் இடையிலான 3 கிலோமீட்டர் தொலைவைக் கடக்க ஒரு மணிநேரம் ஆகும்.

குஜராத் அரசின் சர்தார் சரோவர் திட்டத்தால் தாட்காவ்ன் மற்றும் அக்கால்குவாவில் உள்ள 28 கிராம மக்கள் இடம்பெயர்ந்தனர். சாவ்ரிடிகர் மற்றும் மற்ற கிராமங்களைச் சேர்ந்த மக்களின் மறுவாழ்வுக்காக 2005ஆம் ஆண்டு குழு ஒன்று அமைக்கப்பட்டது.

அக்குழுவின் பரிந்துரைகளில் இந்தக் கிராமத்தில் பாலம் கட்டுவதும் ஒன்று. 2023ஆம் ஆண்டு, பிப்ரவரி 23 அன்று இக்குழுவின் தலைவர் சதீஷ் பிங்காரே அந்த கிராமத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.

பழங்குடி வளர்ச்சித்துறை அமைச்சர் விஜய்குமார் காவிட், இந்தக் கிராமத்தில் பாலம் கட்டித் தரப்படும் என உறுதியளித்துள்ளார். ஆனால், அமைச்சரின் உறுதியை ஏற்க இங்குள்ள மக்கள் தயாராக இல்லை.

பாலத்தின் கட்டுமானப் பணிகள் நிறைவுறாததால், சாவ்ரிடிகர் மற்றும் அருகிலுள்ள எட்டு கிராமங்களில் உள்ள சுமார் 13 ஆயிரம் பேர் தங்கள் உயிரைப் பணயம் வைத்து தினந்தோறும் அந்த ஆற்றைக் கடக்கின்றனர். ஆற்றில் வண்டல் படிவது மேலும் ஆபத்தை அதிகரிக்கிறது.

Leave a Reply

Your email address will not be published.