உரத் தொழிற்சாலைக்கு எதிராக 5 கிராம மக்கள் தொடர் போராட்டம்
மதுரை மாவட்டம் கள்ளிக்குடி அருகே கொக்கலாஞ்சேரி கிராமத்தில் இறைச்சிக் கடைகளில் வீணாகும் கோழிக் கழிவுகளை வைத்து உரம் தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது.
தொழிற்சாலை செயல்படும் நேரங்களில் அதிலிருந்து வெளியேறும் துர்நாற்றத்தால் விவசாயப் பணிகளுக்குச் செல்லும் மக்களுக்கு வாந்தி, வயிற்றுப் போக்கு ஏற்படுவதாகவும் நிலத்தடி நீர் மாசடைவதாக குற்றச்சாட்டு முன்வைத்து தொழிற்சாலையை நிரந்தரமாக மூடக் கோரி 5 கிராம மக்கள் நாடாளுமன்றத் தேர்தலைப் புறக்கணித்தனர். தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். மக்கள் போராட்டத்தால் ஆலை தற்காலிகமாக மூடப்பட்டிருக்கிறது.
மதுரையிலிருந்து 46 கி.மீ. தொலைவில் அமைந்திருப்பது கே.சென்னம்பட்டி கிராமம் இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இது மானாவரி விவசாயம் மற்றும் கால்நடைகள் வளர்ப்பைப் பிரதான தொழிலாக மக்கள் செய்து வருகின்றனர். கோடைக்காலம் என்பதால் வயல்கள் அனைத்தும் வறண்டு காட்சியளித்தன. சில விவசாயிகள் தங்களின் நிலத்தை விவசாயப் பணிகளுக்காக தயார் செய்து வந்தனர்.
கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பாக கிராமத்தில் இருந்து ஒன்றரை கிலோமீட்டர் தொலைவில் எர்த்வைஸ் ஆர்கானிக் (EARTH WISE ORGANIC) என்ற பெயரில் கோழிக் கழிவுகளை வைத்து உரம் தயாரிக்கும் தொழிற்சாலை தொடங்கப்பட்டு செயல்பட்டு வருக்கிறது. இதனால் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுவதாகவும் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டை முன் வைத்துப் போராடி வருகின்றனர்