பழனிசாமி மழுப்பல் பதில்
“தேர்தல் நடத்தை விதி அமலில் இருப்பதால் அதுபற்றி பேச இயலாது” : பிரதமர் மோடியின் வெறுப்பு பேச்சு குறித்து பழனிசாமி மழுப்பல் பதில்
தேர்தல் நடைபெறும் கர்நாடக மாவட்டத்திற்கு ரூ.3,456 கோடி வறட்சி நிவாரணம் விடுவித்திற்கும் ஒன்றிய அரசு, வாக்குப்பதிவு முடிந்த தமிழ்நாட்டிற்கு சம்பிரதாயமாக வெறும் ரூ. 276 கோடியை மட்டும் ஒதுக்கியுள்ளது. தமிழக அரசை வஞ்சிக்கும் ஒன்றிய அரசின் இந்த செயல்பாடு தற்போது பேசும்பொருளாகி உள்ளது. இதனிடையே சேலம் மாவட்டம் எடப்பாடி பேருந்து நிலையம் அருகே அதிமுக சார்பில் அமைக்கப்பட்டுள்ள நீர்மோர் பந்தலை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், “மக்கள் அதிகம் கூடும் இடங்களில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. வெப்பம் அதிகரித்துள்ளதால் மாநிலம் முழுவதும் தண்ணீர் பந்தல் அமைத்து நீர், மோர் தர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
புயல் மழை பாதிப்புக்காக தமிழ்நாடு அரசு கேட்கும் நிதியை ஒன்றிய அரசு எப்போதும் கொடுப்பதில்லை. எப்போதும் கேட்கப்படும் நிதியைவிட குறைந்த அளவு நிதியையே ஒன்றிய அரசு கொடுக்கும். ஏற்கனவே ஏற்பட்ட புயல் வெள்ள பாதிப்புகளுக்கும் ஒன்றிய அரசு உரிய நிதி வழங்கவில்லை. கஜா புயல், வர்தா புயல் வந்தபோது நாங்கள் கேட்ட நிதியை ஒன்றிய அரசு தரவில்லை. மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போதும் புயல் பாதிப்பிற்கு தமிழகம் கேட்ட நிதி விடுவிக்கப்பட்டதில்லை. மாநில அரசின் நிதியில் இருந்து பணத்தை செலவு செய்துவிட்டு பற்றாக்குறை ஏற்பட்டால் ஒன்றிய அரசிடம் கேட்டு நிதி பெறலாம். தமிழ்நாட்டில் தேர்தல் சுமூகமாக நடந்து முடிந்துள்ளது. தமிழ்நாட்டில் வெயில் அதிகமாக இருந்ததால் வாக்குப்பதிவு சற்று குறைந்துள்ளது. ஒப்புகைச்சீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு குறித்து தற்போது கருத்து கூற இயலாது. தேர்தல் நடத்தை விதி அமலில் இருப்பதால் பிரதமர் மோடியின் வெறுப்பு பேச்சுக்காக பாஜக தலைவர் நட்டாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது குறித்து பேச இயலாது,”இவ்வாறு தெரிவித்தார்.