கென்யாவில் இதுவரை 38 பேர் பலியானதாக ஐ.நா. தகவல்
எல் நினோ நிகழ்வால் கிழக்கு ஆப்ரிக்க நாடுகளில் கொட்டும் கனமழை..
நெய்ரோபி: கென்யா தலைநகர் நெய்ரோபியை புரட்டிபோட்டுள்ள வெள்ளத்திற்கு நேற்று ஒரே நாளில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். வெள்ளத்தில் சிக்கி இதுவரை 38 பேர் பலியாகி உள்ளனர். எல் நினோ நிகழ்வால் கிழக்கு ஆப்ரிக்க நாடுகளில் வழக்கத்திற்கு மாறாக கனமழை கொட்டி வருகிறது. இதன் எதிரொலியாக கென்யாவிலும் கடந்த மார்ச் மாதம் பிற்பகுதியில் இருந்து கனமழை பெய்து வருகிறது. கடந்த வாரத்தில் கனமழை அதிதீவிரமாக நைரோபி உள்ளிட்ட ஆறுகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தலைநகர் நெய்ரோபியில் பாயும் நைரோபி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு கரை ஓரங்களில் இருந்த குடியிருப்புகளை மூழ்கடித்தன.
இதில் சிக்கி நேற்று ஒரே நாளில் 10 பேர் உயிரிழந்தனர். சாலைகள் தெரியாத அளவிற்கு காணும் இடங்களில் எல்லாம் வெள்ளம் சூழ்ந்துள்ளது. மக்கள் கூட்டம் கூட்டமாக குடியிருப்புகளை விட்டு வெளியேறி வருகின்றனர். 11,000 பேர் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். ஒரு மாதமாக பெய்யும் கனமழை இயற்கை பேரிடராக மாறிவிட்டது. ஒரு மாதமாக பெய்யும் கனமழையில் சிக்கி இதுவரை 38 பேர் உயிரிழந்துள்ளதாக ஐ.நா. தகவல் அளித்துள்ளது. சுமார் 1 லட்சம் பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். துபாய், சீனாவை தொடர்ந்து, கென்யாவில் பெய்த வரலாறு காணாத கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.