தூவி மணமகளை கடத்த முயற்சி

திருமணம் நடக்க இருந்த சில மணி நேரத்தில் மிளகாய் பொடி தூவி மணமகளை கடத்த முயற்சி

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் கடியம் கிராமத்தைச் சேர்ந்த பதினா வெங்கடானந்து, குண்டூர் மாவட்டம், நரச ராவ்பேட்டையில் உள்ள கல்லூரியில் டிப்ளமோ படித்தார். அதே கல்லூரியில் கர்னூல் மாவட்டம் சலகமரி மண்டலம் கொடிகனூர் கிராமத்தைச் சேர்ந்த கங்கவரம் சினேகாவும் படித்து வந்தார். வெங்கடானந்துவுக்கும் சினேகாவுக்கும் ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறியது.

படித்து முடித்தவுடன் திருமணம் செய்ய இருவரும் முடிவு செய்தனர். ஆனால் பெரியவர்கள் வீட்டில் என்ன சொல்வார்கள் என்று அச்சத்தில் இருந்து வந்தனர்.இந்நிலையில் கல்லூரி படிப்பு முடிந்ததும் திட்டமிட்டபடி கடந்த 13ம் தேதி விஜயவாடாவில் உள்ள துர்க்கை அம்மன் கோயிலில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். பின்னர், வெங்கடானந்து வீட்டில் உள்ள பெரியவர்களிடம் கூறினார். அவர்கள் வீட்டில் அனைவரும் ஏற்றுக்கொண்டனர். இதனால் உறவினர்கள் முன்னிலையில் மீண்டும் கடந்த 21ஆம் தேதி திருமணம் செய்ய இருந்தனர். இதுகுறித்து சினேகா தனது பெற்றோரிடம் கூறி சமாதானப்படுத்த முயன்று திருமணம் தொடர்பாக முகவரியும் வழங்கினார்.

இந்நிலையில் நேற்று கடியத்தில் உள்ள ஒரு திருமண ஹாலில் சில மணி நேரத்தில் உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடக்க இருந்தது. இந்நிலையில் சினேகாவின் உறவினர்களான சரண், சந்து, பரத்குமார் உள்ளிட்டோர் அங்கு வந்து மணமகன் மற்றும் அவர்களது உறவினர்கள் மீது மிளகாய் தூள் வீசி சினேகாவை கடத்த முயன்றனர். இதனை மணமகன் வெங்கடானந்து உறவினர்கள் தடுத்தனர்.

இதில் வெங்கடானந்துவின் உறவினர்கள் பலத்த காயம் அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்த நிலையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சினிமா பாணியில் நடந்த இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published.